திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் வெடால் கிராமத்தில் உள்ள பாறை ஒன்றில் கல்வெட்டு இருப்பதாக வந்த தகவலின் பெயரில் திருவண்ணாமலை மரபுசார் அமைப்பை சார்ந்த ராஜ் பன்னீர் செல்வம், உதயராஜா, சரவணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுகள் குறித்து மரபுசார் அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம், நாங்கள் வாரத்தில் ஒரு முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வெட்டுகளை பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். வந்தவாசி வட்டம் வெடால் கிராமத்தைச் சேர்ந்த விஜயன் தங்கள் ஊரில் பாறையில் கல்வெட்டொன்று இருப்பதாக அளித்த தகவலின் பெயரில் நாங்கள் செல்வம் , உதயராஜா மற்றும் சரவணன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள இருசக்கர வாகனத்தில் சென்றோம்.
செல்லும் வழி எங்கும் தற்போது பொழிந்து வரும் மழையால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று விவசாய நிலங்கள் மற்றும் சுத்தமான காற்று போன்றவற்றை சுவாசித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு கிராமத்தின் மேற்கே மலையடிவாரத்திற்கு சென்றோம். மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் பெரிய பாறையின் மீது 13 வரிகளில் எழுதப்பட்டிருந்த கல்வெட்டு மிகவும் தேய்ந்த நிலையில் காட்சி அளித்தது. அதனைச் சற்று சுத்தம் செய்து ஆய்வு செய்ததில் அக்கல்வெட்டு 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பல்லவ மன்னன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனின் (கி.பி 1216-1242) கல்வெட்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்வதஸ்ஸ்ரீ அவனி ஆளப்பிறந்தான் என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு பெரும்பான்மை நீரில் மூழ்கியே இருப்பதால் கல் சேதம் அடைந்து கல்வெட்டும் சிதைந்துள்ளது. இருந்தபொழுதிலும் கிடைத்த தகவலை வைத்து அது பாடல் கல்வெட்டு என்பதை எஙகளால் அறியமுடிகிறது.
இக்கல்வெட்டில் கோப்பெருஞ்சிங்கனை "காடவராய மகனார்" என்றும் தொண்டை நாட்டை கைப்பற்றி ஆட்சி செய்தமையை "தொண்டை நாடு கொண்ட பல்லவாண்டராயன்" என்ற செய்தியும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இக்கல்டெ்டில் "வெண்குல தொண்டரைய குலவேந்தன், திசைபூவன காடவராயன் , செங்கோற் காடவன் , கனலெழியராயன்" என்று கோப்பெருஞ்சிங்கனைச் சிறப்பித்து கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே வயலூர், அத்தி போன்ற ஊர்களில் இது போன்ற பாடல் வடிவிலான கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு ஆவணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதகுந்தது. இது கோப்பெருஞ்சிங்கனின் தமிழ் பற்றை பறைச் சாற்றும் மற்றுமொரு கல்வெட்டு. மேலும் இவ்விடத்தை ஓட்டிய மலைப்பகுதியின் அடிவாரத்தில் ஆய்வு செய்த பொழுது 3000 வருடத்திற்க்கு மேல் பழமையான குத்துக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இனக்குழுவில் இறந்தவர் நினைவாகக் குத்துக்கல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.
இன்றும் பல ஊர்களில் குத்துக்கல் மூத்தோர் வழிபாட்டு முறையின் அங்கமாக உள்ளது. இங்கே காணப்படும் குத்துக்கல்லின் முனையில் சிறிய வட்டவடிவிலான பகுதி தேய்ந்து பள்ளமாகக் காணப்படுகிறது. சங்கம் மற்றும் சங்கம் மருவிய காலத்தில் வேட்டைக்கும் போருக்கும் செல்லும் முன் தங்கள் ஆயுதங்களை இது போன்று வழிபடும் குத்துக்கல்லின் மீது தேய்த்து எடுத்துச் சென்றால் அக்காரியம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்துள்ளது. அதுபோல இக்குத்துக்கல்லில் ஆயுதங்களைத் தீட்டியதால் அக்குழி ஏற்பட்டு இருக்கக் கூடும் என்று அனுமானிக்கப்படுகிறது. இங்குக் காணப்படும் குத்துக்கல் அருகே கல்வட்டம் ஒன்றும் பாதி சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. இதன் மூலம் இவ்விடத்தின் தொன்மை சுமார் 3000 வருடங்களுக்கு மேற்பட்டது என்பதை அறியலாம்.
மேலும் மலையில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் புடைப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதன் அருகே காணப்படும் கரைகண்டேஸ்வரர் என்று அழைக்கப்படும் குடவரை கோவில் ஒன்றுள்ளது. இக்கோவிலில் பாறையில் புடைப்பாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் முனிவர் ஒருவர் லிங்கத்தை வணங்கிய நிலையிலும் பிள்ளையார் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. இவையாவும் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும். இவ்வூரில் குத்துக்கல் கண்டறியப்பட்ட இடத்தை ஒட்டிய பகுதிகளில் மேற்பரப்பில் ஆங்காங்கே பானை ஓடுகள் கிடைக்க பெறுவதால், இவ்விடத்தை மேலும் ஆய்வு செய்தால் நமக்கு புதிய தகவல்கள் கிடைக்கக்கூடும் என்றனர்.