திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 20127 அங்கன்வாடி மையங்களில் 12714 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். அதில் 3,400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழக அரசு சார்பில் 10. 2 லட்சம் செலவில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதன் தொடக்கமாக இன்று திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் பாரம்பரிய உணவு விழா நடைபெற்றது.


இந்நிகழ்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் வரவேற்றார். மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி தொடங்கி வைத்து, 550 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பே.கிரி,பே.சி.தி. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 




 


இதற்கு முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “பெண்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி தாய் வீட்டில் தான் நடத்தப்படும். ஆனால் தற்போது தமிழக முதல்வர் கர்ப்பிணி பெண்களுக்கு தாயாக இருந்து தாய்வீட்டு சீர் செய்வது போன்று  சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார். கருவுற்ற தாய்மார்கள் மகப்பேறு காலங்களில் பாதுகாப்பாகவும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும். மருத்துவர்களின் அறிவுரைகளையும் கேட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறக்கும். தாங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்கவேண்டும். ஏன் என்றால் நாம் அனைவரும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோம். அனைவரும் தமிழில் தான் பேசுகிறோம். நாம் அனைவரும் தமிழில் தான் அம்மா அன்று அழைக்கிறோம். சம்ஸ்கிருதத்தில் குழந்தைகளுக்கு பெயர்களை வைக்காதீர்கள்.  தங்களுடைய குழந்தைகளுக்கு தமிழ்பெயர் சூட்டவேண்டும், அதிமுக ஆட்சி காலத்தில் திருமணம் செய்யும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அளிப்பதாக கூறி அவர்கள் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் கழித்து தான் தாலிக்கு தங்கத்தை பெண்களுக்கு அளித்தார்கள்,


 


 




அதிலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் தாலிக்கு தங்கம் பெண்களுக்கு அளிக்கவில்லை. பெண்களுக்கு ‌முக்கியதுவம் கொடுக்கும் ஆட்சியாக தான் தளபதி ஸ்டாலின்  திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் தமிழை வளர்த்து வருகிறது. திமுக ஆட்சியில் தமிழை வளர்ப்பதன் மூலமாக மீண்டும் திருவள்ளுவர் பிறந்துள்ளார்” என்று பேசினார்.


அதன் பிறகு இவ்விழாவில் பாரம்பரிய உணவு திருவிழா குறித்து பார்வையிட்ட 150 வகையான சிறு தானியங்கள் செய்யப்பட்ட உணவு வகைகள் மற்றும் கீரை சூப் வகை கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பாரம்பரிய  உணவு விழாவில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பரிசு பொருட்களை வழங்கினார். மேலும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்போம் என்ற திட்டத்தின் கீழ் அங்கவாடி குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.