தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நாட்களாக தொடர்ந்து பெய்த வந்த கனமழையால் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பேரி பஞ்சாயத்தில் உள்ள பெரிய ஏரியில் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அப்படி வெளியேறும் உபரி நீர் சாத்தனூர் அணைக்கு சென்று  வீணாக கடலில் கலப்பதால், பெரிய ஏரியின் அருகே விஷமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து கால்வாய் மூலமாக நீரை திருப்பிவிட விஷமங்கலம் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அமர குஷ்வாகாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பொது மக்களின் கோரிக்கையின் பேரில் அப்பகுதியில் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் கால்வாய் மூலமாக தண்ணீரை விஷமங்கலத்துக்கு திருப்பிவிட உத்தரவிட்டார்.



 

இதனையடுத்து இன்று பணிகள் தொடங்கிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குரும்பேரி கிராம மக்கள்  உபரி நீரை திருப்பிவிட சம்மதிக்க மாட்டோம் எனக்கூறி கால்வாயில் தண்ணீர் திருப்பி விடும் பணியை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சார் ஆட்சியர் பானு உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகிரிகளின் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத குரும்பேரி கிராம பொதுமக்கள் தங்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் வேண்டும் எனவும் ஊர் பொதுமக்கள் கூடி ஆலோசனை செய்து முடிவு தெரிவிப்பதாகவும் கூறினர். இதனால் இரு கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் குரும்பேரி ஊராட்சி மன்ற தலைவர் ராமர் என்பவர் கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி இந்திரங்களை பணி செய்ய விடாமல் தடுத்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தண்ணீரை விடாது குறித்து குரும்பேரி கிராம மக்கள் கூறுகையில், தற்போது தொடர் மழை பெய்வதால் எங்கள் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அதனால் விஷமங்கலம் மக்கள் இந்த தண்ணீரை கேட்கிறார்கள். ஆனால் வெயில் காலம் தொடங்கியதும், தண்ணீர் இல்லை எனை கூறி எங்கள் குரும்பேரியில் உள்ள தண்ணீர் திறந்துவிட சொல்வார்கள் அதனால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என கூறினர்.

 



 

தண்ணீரை கேக்கும் விஷயங்கலம் மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள ஏரிக்கு மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் நிரம்பும் தொடர்ந்து கனமழை பெய்து வந்த போதிலும் தற்போது வரை 50 சதவீத அளவுக்கு கூட ஏறி நிரம்பவில்லை இதனால் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குரும்பேரி ஏரியில் இருந்து செல்லும் உபரி நீர் சுமார் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் பாம்பாற்றில் சென்று கலந்து சாத்தனூர் அணைக்கு வீணாக செல்கிறது. ஆகவே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ள எங்கள் பகுதிக்கு திருப்பிவிட்டால் எங்கள் ஏரி நிரம்பி குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு பயன்படும் என கூறுகின்றனர். இந்த தண்ணீர் பிரச்சனை விஷமங்கலம் மற்றும் குரும்பேரி இரு கிராமங்களுக்கு இடையே சுமார் 40 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் குரும்பேரிக்கு அதிமுகவைச் சேர்ந்த ராமர் ஊராட்சி மன்றத் தலைவராகவும், விஷமங்கலத்துக்கு திமுகவை சேர்ந்த அழகிரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.