நினைத்தாலே முக்தி தரும் இடம் திருவண்ணாமலை ஆகும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறத்தில் சிவனே மலையாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த மலையை சுற்றி 14 கிலோமீட்டர் கிரிவலம் வருவார்கள். இந்நிலையில் மாதந்தோறும் பௌர்ணமி நாட்கள் மற்றும் அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். எனவே, கிரிவல பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், 24 மணி நேரமும் இயங்கும் ரோந்து வாகனமும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. இதுமட்டுமின்றி, கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க சீருடை அணியாத காவலர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், கிரிவலப்பாதையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக கூடுதல் ஏற்பாடாக, 24 மணி நேரமும் இயங்கும் 5 இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


 




இந்நிகழ்ச்சியில், நகர டிஎஸ்பி குணசேகரன், ஆய்வாளர் சுப்பிரமணி, துணை ஆய்வாளர் ராஜீவ்காந்தி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேட்டியளிக்கையில். கிரிவலப்பாதையில் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காகவும், விரைந்து குற்றவாளிகளை பிடிக்க வசதியாகவும் இருசக்கர ரோந்து வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதாகவும், அரசு கலை கல்லூரியில் தொடங்கி, அண்ணா நுழைவு வாயில் வரையுள்ள 10 கிமீ தொலைவில், இந்த வாகனங்கள் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடும் என்றும், மேலும், 2 கிமீ தூரத்துக்கு ஒரு வாகனம் என மொத்தம் 5 ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடும் எனவும் இந்த வாகனங்களில் வாக்கி டாக்கி மற்றும் எப்ஆர்எஸ் செயலி கொண்ட மொபைல் போன் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். 


 




 


திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் குறித்து தகவல் தெரிவிக்க 'வாட்ஸ் அப்' எண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அறிமுகம் செய்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கனவே போதைப் பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்க 9159616263 என்ற 'வாட்ஸ் அப்' எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்தலாம். தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும். இந்த நடவடிக்கைக்காக மாவட்டம் முழுவதும் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணானது முழுவதுமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.