வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வடக்குபட்டறை பங்காரு நகரை சேர்ந்தவர் குணசீலன் வயது (27). பொக்லைன் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மோனிஷா வயது (23) மகள் மயூரி (1½). இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் குணசீலன், மோனிஷா, மயூரி, குணசீலனின் சகோதரி நீலாவதி ஆகிய 4 நபர்கள் சென்றனர். தூசி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலைதடுமாறி 4 நபர்களும் சாலையில் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தில் சிக்கிய குழந்தை மயூரி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். குணசீலன் உள்பட 3 நபர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தூசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


===========================================


 




 


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பொன்னூர் மலை அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரி உள்ளேயே கல்லூரி விடுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் கிஷோர்காந்த் வயது (21) இவர் 4-ம் ஆண்டு பி.டெக் பயின்று வருகிறார். கிஷோர்காந்த் நேற்று காலை வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுள்ளார். பின்னர் வகுப்பறைக்கு சென்ற பிறகு கிஷோர்காந்த் தனக்கு வயிற்றுவலி இருப்பதாக சக மாணவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வகுப்பறையில் இருந்து விடுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கிஷோர்காந்த் மதியம் திடீரென விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த கல்லூரி நிர்வாகிகள் உடனடியாக வந்தவாசி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.


 




 


தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிஷோர்காந்த் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் கிஷோர்காந்துக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாகவும் காலையில் சக மாணவர்களிடம் வயிற்றுவலி அதிகமாக உள்ளது என கூறியதாக தெரியவந்தது. மேலும் பொன்னூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கல்லூரி வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.