திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளியில், சாலவேடு, கீழ்சீஷமங்கலம், ஒட்டக்கோவில்  200-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த உயர்நிலை பள்ளியில் துணை தலைமை ஆசிரியராகவும் பரணி என்பவர் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  


ஆசிரியர் பரணி தனது பள்ளியில் அறிவியல் பாடங்கள் சம்பந்தமாக மாணவிகளுக்கு பாடங்கள் குறித்த விளக்கம் அளிக்கவும், செய்முறை தேர்வு குறித்து பயிற்சி அளிக்கவும் ஆசிரியர் தனியாக ஒரு வாட்ஸ்அப் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழுவில் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் இணைக்கப்பட்டு இருந்துள்ளனர். வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள சில மாணவிகளை மட்டும் அறிவியல் ஆசிரியர் தனியாக இரவு நேரங்களில் வீடியோ காலில் வரும்படி கூறியுள்ளார்.


 


 




இதனை ‌அறியாத  பள்ளி மாணவிகள் வாட்ஸ் அப்பில் வீடியோகாலில் வந்துள்ளனர். அப்போது ஆசிரியர் அந்த மாணவியிடம் பாடம் குறித்து பேசுவது போன்று பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு மாணவி வீடியோ காலை கட் செய்துள்ளார். அதன் பிறகு மற்ற மாணவிகளை வீடியோ காலில் வரகூறி அவர்களிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, மாணவிகள் தங்களிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர் கூறித்து பெற்றோர்களிடம் எங்களுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும், இரவு நேரத்தில் மாணவிகளுக்கு 'வாட்ஸ் அப்'பில் வீடியோ கால் செய்வதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் பரணிக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்திற்கு  தகவல் அளித்துள்ளனர்.


 




 


தகவல் அறிந்த கீழ்க்கொடுங்காலூர் காவல்துறையினர் விரைந்து பள்ளிக்கு சென்று பெற்றோர் மற்றும் பொதுமக்களிடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படும் பட்டதாரி ஆசிரியர் பரணியை கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு காவல் நிலையத்தில்  ஆசிரியர் பரணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தீபிகா, அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பரணி மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர்.