பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் பயனாளிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார் அதில் மத்திய அரசு 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்துடன் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்தினை அறிமுகம் செய்தது. 2021-22-ஆம் ஆண்டு பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ஆவாஸ் பிளஸ் தரவுகளில் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்று உள்ள ஓ.சி., ( OC ) மைனாரிட்டி, எஸ்.சி. (SC )  மற்றும் எஸ்.டி. (ST ) பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்த பயனாளிகளுக்கு 20 ஆயிரத்து 515 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதில் தகுதியான பயனாளிகளுக்கு தற்போது வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசின் பங்கு தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மாநில அரசின் மேற்கூரை நிதி மற்றும் கூடுதல் நிதி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 90 திறன்சாரா மனித சக்தி நாட்களுக்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.273 வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரத்து 570, தனிநபர் இல்லக்கழிவறை கட்ட ரூ.12 ஆயிரம் என ஒரு வீட்டிற்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 570 வழங்கப்பட உள்ளது. 



இந்நிலையில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு பெற பயனாளியின் பெயர் ஆவாஸ் பிளஸ் தரவுகளில் இடம் பெற்றிருக்க வேண்டும்.  மேலும் வீடு கட்ட குறைந்தது 300 சதுர அடி சொந்த நிலம் உடையவராகவும், வேறு இடத்தில் கான்கிரீட் வீடு இல்லாதவராகவும், இதற்கு முன் அரசு திட்டங்களில் வீடு பெறாதவராகவும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் தகுதியற்ற பயனாளிகளை தேர்வு செய்தாலோ அல்லது தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க லஞ்சம் ஏதேனும் பெற்றாலோ தொடர்புடைய அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 


மேலும் பயனாளிகளை பரிந்துரை செய்த மூன்றடுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் எவரேனும் கையூட்டு பெறுவதாக புகார் ஏதேனும் வரப்பெற்று அப்புகார் நிருபிக்கப்படும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளது. 



இது குறித்து கிராம புறங்களில் உள்ள பொதுமக்களிடம் பேசுகையில்  தச்சம்பட்டு, வேளையாம்பாக்கம், பழையனூர்,  உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் நாங்கள் பல வருடங்களாக குடுசை வீடுகளிலும் ,சீட்டு, ஓட்டு வீடுகளில் தான் வசித்து வராகிறோம். எங்களது வீடுகளில் மழை காலகளில் வீட்டில் மழையில் ஒழுகும் இதனால் எங்களுக்கு இலவச வீடுகள் வேண்டும்  என்று பல முறை எங்கள் பகுதி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகள், ஆட்சியரிடமும் மனுக்கள் அளித்து விட்டோம்.


ஆனால் இதுவரையில் எங்களுக்கு வீடுகள் வழங்கவில்லை. இருப்பினும் வீடு வேண்டும் என்று எங்கள் கிராம பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டால் எங்களிடம் 20ஆயிரம் பணம் லஞ்சம் கொடுத்தால் உங்களுக்கு வீடு வழங்கப்பட்டும் என்று கூறுகின்றனர். மேலும் எங்கள் பகுதியில் இலவச வீடு கட்சியை சேர்ந்த நபர்களுக்கும் மற்றும் வீடு கட்டிய நபர்களுக்கே வீடுகள் மீண்டும் மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் வீடுகள் கட்டியுள்ளனர். இது குறித்து எந்த அதிகாரிகளும் கேட்கவில்லை. இதனால் வீடு இல்லாமல் எங்களை போல்  தவிக்கும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்