திருவண்ணாமலை அடுத்த தென்கரும்பலூர் கிராமத்தில் உள்ள HH124 என்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் 3800 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் அதிமுகவைச் சேர்ந்த மோகன் என்பவர் தலைவர் பதவி வகித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு அறிவித்த மகளிர் சுய உதவி குழு கடன், பயிர்க்கடன், கரும்பு பயிர் கடன் ஆகியவற்றில் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இறந்தவர்கள் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மீது அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயரில் நகைக்கடன், பயிர்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவி குழு கடன் என பல்வேறு வகையில் இந்த கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அதிகாரிகள், உறுப்பினர்களுக்கே தெரியாமல் உறுப்பினர்கள் பெயரில் கடன் பெற்றுள்ளதாக போலி ரசீது போட்டு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் வேளையில் தற்பொழுது, நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் நகை கடன் வழங்குவதாக கூறி நகைகளை பெற்றுக்கொண்டு அதற்குண்டான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்திருந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இதுவரை வங்கிக் கணக்கில் பணம் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த ஊழியர்கள், தற்பொழுது கொடுக்காத பணத்திற்கு வட்டி கட்டச் சொல்லி கிராம மக்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடனை பெறாத உறுப்பினர்களுக்கு வட்டி கட்ட சொல்லி வங்கியில் இருந்து நோட்டீஸ் சென்றதால் அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள், இந்த முறைகேடு குறித்து வங்கியில் முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
குறிப்பாக நகைக்கடன் பெற்றதற்கான ரசீது வாடிக்கையாளரிடம் இருக்கும்போது அதற்கு வட்டி கட்டுவதற்காக வந்த கிராம மக்களிடம் தங்கள் நகை ஏலம் போய்விட்டது என்று கூறிய ஊழியர்களால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் செய்வதறியாது அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒருசில வாடிக்கையாளரிடம் தங்கள் நகை விற்கப்பட்டது என்று பகிரங்கமாக ஊழியர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இணை இயக்குனரிடம் பலமுறை புகார் அளித்தும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், விவசாயிகளை இது குறித்து விவரங்களை பெரிதாக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் கூறுவதாக தகவல் தெரிவிக்கும் அவர்கள் தங்களிடம் அனைத்திற்கும் உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த முறைகேடு குறித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தாங்கள் புகார் அளித்துள்ளதாகவும், ஆகவே இந்த முறைகேடு குறித்து முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி உரிய அதிகாரிகளை நியமித்து விசாரணை செய்து தவறு செய்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து பேசிய கிராம மக்கள் 450 சவரன் தங்க நகைகளை வங்கி ஊழியர்கள் தங்களுக்கு தெரியாமல் விற்று விட்டதாகவும், இதற்கு உண்டான அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் கூறுபவர்கள், இது மட்டுமின்றி பல கோடி ரூபாய் வங்கி ஊழியர்கள் தலைவர் உள்ளிட்டவர்கள் ஒன்றிணைந்து கூட்டாக ஊழல் செய்துள்ளதாகவும் உடனடியாக தமிழக அரசு தங்கள் கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கணக்கை அதிகாரிகளை கொண்டு சரிசெய்து தங்கள் நகைகளை மீட்டு தருமாறும், தாங்கள் வாங்காத பணத்திற்கு வட்டி கட்ட சொல்லி உள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.