ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம், கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மணி. இவர் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் விவசாய நிலத்தை 6 ஆண்டுக்கு குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது மூத்த மருமகனுடன் நிலத்திற்குச் சென்றுள்ளார். விவசாயி மணிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகள் நிர்மலா அவருடைய கணவர் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ், இவர் சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

 



 

கடந்த போகம் அறுவடை செய்த நிலையில் தற்போது பெய்து வரும்  தொடர் மழையால் மீண்டும் விவசாயம் செய்ய நிலத்த்தை சீர் செய்ய மணி தனது மருகன் சுபாஷுடன் நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றில் இருந்து தண்ணீர் போட மின்மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது நீர் குறைவாக வருவந்துள்ளது. நீர்மூழ்கி மோட்டார் என்பதால் மோட்டாரில் சேறு சிக்கி இருக்கலாம் என்று எண்ணிய மணி முதலில் கயிற்றைக் கட்டி கிணற்றின் உள்ளே இறங்கி உள்ளார். 12 ஆழமும் 6 அடி அகலம் கொண்ட உரை கிணற்றில் முதலில் இறங்கிய மணி திடீரென தவறி உள்ளே விழுந்துள்ளார். மாமனார் கிணற்றில் விழுந்ததை பார்த்த மருமகன் சுபாஷ், அவரை காப்பாற்ற உடனே அவரும் கிணற்றில் இறங்கியுள்ளார்.

 

இந்நிலையில் நிலத்திற்கு சென்ற தந்தையும், கணவரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சுபாஷின் மனைவி நிர்மலா நிலத்துக்கு சென்று பார்த்தபோது இருவரின் உடைகள் கிணற்றுக்கு மேலே இருந்ததை கண்டு காவல் துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த அவலூர் காவல் துறையினர் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் இருவரும் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்த போது இருவரும் கிணற்றில் சடலம் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பாதலகொலுசு உதவியுடன் இருவரின் சடலங்களையும் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கா வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 



 

விவசாயம் செய்யச் சென்ற விவசாயி மணி மற்றும் மருமகன் சுபாஷ் ஆகிய இருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டது குறித்து சுபாஷின் மனைவி நிர்மலா அளித்த புகாரின் அடிப்படையில் அவலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் கிணற்றில் விஷவாயு தாக்கி மாமனார், மருகன் என இருவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விவசாய கிணற்றில் மாமனார், மருகன் என இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.