விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்துவிட்டு பின்னர் காவல்துறை அனுமதி அளிக்கும் நாளில் ஊர்வலமாக சிலைகளை கொண்டு சென்று அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கும் அதனை ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி, இந்து மக்கள் கட்சி என அனைத்து இந்து மத கட்சியினரும், தங்களது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பாஜக சட்டமன்ற கட்சி குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த ஏன் அரசு மறுப்பு தெரிவிக்கின்றது என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா மாநிலத்தில் இதேபோல் ஓணம் மற்றும் பக்ரீத் உள்ளிட்ட சமய பண்டிகைகளுக்குத் தளர்வு அளித்ததால் தான் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டில் இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே பொது இடங்களில் கூட்டம் சேரும் வகையில் சிலைகளை வைத்து வழிபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், வீட்டில் வழிபாடு செய்த சிலைகளை சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோயில்களில் வைப்பதற்கும் மற்றும் நீர்நிலைகளில் கரைப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் இதில் தேவைபடுகின்றது என தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டாட்டத்தை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி பகுதியிலுள்ள அணைத்து கடைவீதிகளும், மார்க்கெட் பகுதிகளிலும் பெரிய அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்.
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்கும் அதனை ஊர்வலமாக கொண்டு சேர்க்கும் தமிழக அரசு தடை விதியுள்ளதால் வழக்கமாக விநாயகர் சதுர்த்தி அன்று காணப்படும் உற்சாகம் இந்த ஆண்டு சற்று குறைந்தே காணப்பட்டது.
இருந்தபோதிலும் விநாயகர் சதுர்த்தியான நாளை வீடுகளில் சிலைகள் வைத்து பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளில் மக்கள் முழு ஆர்வத்துடன் ஈடுபட்டு உள்ளனர் இதனால் வேலூரில் இன்று பொதுமக்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்கான சிறிய வடிவிலான சிலைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். சிறிய வடிவிலான விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை சாமான்கள் வாங்குவதற்காக முண்டியடித்து கொண்டு பொதுமக்கள் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. அரசு வழிகாட்டுதலின்படி பின்பற்றவேண்டிய சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டனர்.
மேலும் பூஜைக்கு தேவையான பழவகைகள், வாழை இலை, விலாங்காய், நிலக்கடலை மற்றும் சிறிய வண்ண வண்ண குடைகள் ஆகியவற்றை பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு வாங்கி சென்றனர் இதனால் வேலூர் லாங் பஜார் மற்றும் நேதாஜி மார்க்கெட் பகுதிகளிலும், சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பல இடங்களில் படும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதன் காரணமாக பூக்கள் பழங்கள் உட்பட அனைத்து பூஜை பொருட்களின் விலையும் அதிகரித்து இருந்தது.
இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது மல்லிகை ஒரு கிலோ 400 ரூபாயில் இருந்து 800 ரூபாய்க்கும், முல்லை 300 ரூபாயில் இருந்து 700 ரூபாய்க்கும், சாமந்தி 170 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 1,200 ரூபாய்க்கும், ரோஜா 100 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கும் விற்பனையானது. இதேபோல் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களில் 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது இன்று மற்றும் நாளை முகூர்த்த நாள் என்பதாலும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பழங்கள் பூக்களின் விலை அதிகரித்துள்ளது நாளை மாலை வரை விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.