கேரளா உள்ளிட்ட தமிழ் நாட்டின் அண்டை மாநிலங்களில் தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துவருவதை ஒட்டி  சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வழிபாட்டிற்கு வைப்பதற்கும் அதனை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் தமிழ் நாடு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி,  இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட பல இந்து அமைப்பினர் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு இந்து மதத்திற்கும் இந்து மத நம்பிக்கையாளர்களுக்கும் எதிரான அறிவிப்பு என்று விமர்சித்து தடைகளை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.



 

இந்து அமைப்பினரின் இந்த அறிவிப்பு
  கொரோனா  தொற்று பரவலுக்கு வழிவகுக்காமல் இருக்கவும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுப்பதற்காகவும்   ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் இன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை அருகே ,  இந்து முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தடையை மீறி விநாயகர் சிலை ஒன்றை நிறுவினார்.

 


 

இது தொடர்பாக அரக்கோணம் நகரக் காவல் நிலைய போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் நகர காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர் . அப்போது அங்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றும்படி உடன் வந்திருந்த  காவலர்களுக்கு ஆய்வாளர் சீனிவாசன் உத்தரவிட்டார். அப்போது அங்கிருந்த இந்து அமைப்பினருக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 


 

சிலையை காவல்துறை அகற்றுவதற்கு  நாங்கள் அனுமதிக்க  மாட்டோம் என்றும் , மாறாக இங்கு வைக்கப்பட்ட விநாயகர்  சிலையை நாங்களே எடுத்துச் சென்று வடமாம்பாக்கம் ஏரியில் கரைப்பதற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 30  நிமிடத்திற்கும் மேல் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்  காவல்துறை உடனடியாக பழைய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை  இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களே அகற்றுவதற்கு அனுமதி கொடுத்ததால், அங்கு கூடியிருந்த இந்து மத அமைப்பை சேர்ந்தவர்கள் வைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு சூடம் காண்பித்து, தேங்காய் உடைத்து 'பாரத் மாத்தா கி ஜே' என கோஷங்களை எழுப்பி 3 ஆடி உயர விநாயகர் சிலையை இருசக்கர வாகனத்தில் வைத்து வடமாம்பாக்கம் ஏரியில் கரைப்பதற்காக  எடுத்துச் சென்றனர்.

 



 

 

தடை மீறி பொது இடத்தில விநாயகர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் அரக்கோணம் நகரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .