வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள பொய்கை கிராமத்தின் முத்தாலம்மன் கோவிலில் நேற்று கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு வேலூர் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த ரெஜினா என்ற பெண் மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவினர் வருகை தந்து அந்த பகுதி மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தடுப்பூசியும்  செலுத்திவந்தனர். அப்பொழுது அம்மன்  கோவில் கருவறை முன் போடப்பட்டிருந்த இருக்கையில் பெண் மருத்துவர் ரெஜினா  செருப்பு அணிந்து அமர்ந்திருந்ததைப் பார்த்து முகம் சுளித்த கிராம மக்கள், பெண் மருத்துவர் ரெஜினாவிடம் சென்று செருப்பை வெளியில் கழற்றி விட்டு வரும்படி  கூறியுள்ளனர்.

 

அதற்கு அந்த மருத்துவர் '’இங்குச் செருப்பு அணிந்து வர வேண்டாம்’’ என போர்டு வைத்து உள்ளீர்களா? எனவும் கொரோனா தடுப்பூசி முகாமில் அதிகளவில் மக்கள் வந்து செல்வதால் எளிதில் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புள்ளது எனவே நான் செருப்பைக் கழற்ற மாட்டேன் என்றும் பெண் மருத்துவர் ரெஜினா தெரிவித்ததாக கூறப்படுகிறது. 



 

 

இதனால் கோபமுற்ற பொதுமக்கள் பெண் மருத்துவர் ரெஜினாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் பெண் மருத்துவர் ரெஜினாவை வெளியேற்றினால்தான், தடுப்பூசி போட்டுக் கொள்வோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இந்து முன்னணி
  பொறுப்பாளர் ஆதி சிவா தனது ஆதரவாளர்களுடன் பெண் மருத்துவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் கோவிலை அவமதிப்பதற்காகச் செருப்பு அணிந்து வரவில்லை என்றும்,  மாறாக கொரோனா நோய் தோற்று எளிதில் பரவ வாய்ப்புள்ளதால் தான் செருப்பு அணிந்துள்ளேன் என்றும் பெண் மருத்துவர் ரெஜினா விளக்கமளித்தார்.


 

பெண் மருத்துவர் ரெஜினாவின் விளக்கத்தை கேட்டு சமாதானம் அடைந்த இந்து முன்னணியினர் அப்பகுதியில் இருந்து களைந்து சென்றனர்.