வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணியின் செல்போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 35 நிமிட காலதாமத்திற்கு பிறகு மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் விரைவு ரயிலில் குஷ்நாத்கர் என்ற பயணி தனது செல்போனை சார்ஜ் போட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் செல்போன் அதிக வெப்பத்தின் காரணமாக வெடித்துள்ளது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயிலில் இருந்த 11 மற்றும் 12 ஆகிய பெட்டிகளில் இருந்து திடீரென புகை வந்ததால், பயணிகள் அலறி அடித்து சத்தம் போட்டுள்ளனர்.
உடனடியாக வந்தே பாரத் ரயில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டு, பெட்டின் கதவுகள் திறக்கப்பட்டு புகை முழுவதும் வெளியேற்றப்பட்டு, பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல், மீண்டும் ரயில் 35 நிமிட கால தாமத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது.
இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் ரயிலில் பயணித்த பயணியின் செல்போன் சார்ஜ் செய்யும் போது வெடித்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.