வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழாவில், தேசிய கல்வி தொழில்நுட்பக் கழகத்தின் (என்சிடிஎஃப்) தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 


அப்போது அனில் டி.சஹஸ்ரபுதே பேசுகையில்,


உயர்கல்விக்கு அரசு அதிகளவில் நிதி ஒதுக்க வேண்டும் என்பதுடன், தனியார் நிறுவனங்களும் அதற்கான பங்களிப்பை செலுத்திட வேண்டும். அவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயலாற்றும் போது மட்டுமே உயர்கல்வி விகிதத்தை மேம்படுத்த முடியும். தற்போது தொழில்நிறுவனங்கள் கல்வி, தனித்திறன், நற்பண்புகள் ஆகிய மூன்றும் சமநிலையில் இருப்பதை எதிர்பார்க்கின்றன. எனவே, மாணவர்கள் கல்வியுடன் தனித்திறனையும், நற்பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பெரும்பாலும் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப பாடப் பிரிவுகள் மீதே ஆர்வம் கொண்டுள்ளனர். இந்த ஆர்வம் 1990-இல் இருந்தே தொடங்கியது என்றாலும், இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அதேசமயம், சிவில், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் ஆகிய துறைகளும் அதிகளவில் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியவை என்பதால், அந்த துறைகளிலும் மாணவர்கள் தங்கள் அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


தற்போது வேலையளிக்கும் நிறுவனங்கள் ஒருதுறை சார்ந்த அறிவைவிட பலதுறை அறிவுத்திறன் கொண்ட இளைஞர்களைத்தான் தேடுகின்றன. அவ்வாறு பலதுறை அறிவுத்திறன் என்பதை சுயதொழில் மேம்பாட்டுக்கும் உறுதுணையாக அமைகின்றன. இந்தியாவில் கடந்த 2014-இல் 400 புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட்அப்) தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 1.50 லட்சம் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தளவுக்கு நாட்டில் சுயதொழிலுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. சுயதொழில்கள் மூலம் அதிகளவில் வருவாய் ஈட்ட முடிவதுடன், பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்திடவும் முடியும். எனவே, மாணவர்கள் அதிகளவில் சுயதொழில் தொடங்க ஆர்வம்காட்ட வேண்டும். அத்துடன், மாணவர்கள் எப்போதும் கற்பதை நிறுத்திவிடக்கூடாது. தங்கள் வாழ்நாள் முழுமைக்கும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவும் (யூஜிசி) மருந்துகளுக்கு உள்ளதுபோல் பட்டப்படிப்புகளுக்கும் அதிகபட்சம் 5 ஆண்டுகள் நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் மாற்றத்துக்கு ஏற்ப புதிய பட்டப்படிப்புகளை கொண்டுவர முடியும் என்றார்.


விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது 


ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் அதற்கு கல்விதான் அடிப்படை. ஆனால், இந்தியாவிலுள்ள 140 கோடி மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பெற்றவர்களாக உள்ளனர். தேசிய கல்விக்கொள்கை இந்தியாவின் உயர்கல்வி விகிதத்தை 27 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கிறது. அது சாத்தியமாக வேண்டுமென்றால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட வேண்டும். ஆனால், இந்தியாவில் அதிகபட்சம் 3 சதவீதம் மட்டுமே கல்விக்காக ஒதுக்கப்படுகிறது.


இதனால், கல்விக்கான நிதிசுமையை பெற்றோர்களே ஏற்க வேண்டியுள்ளது. இந்நிலையை மாற்றிடவும், ஏழை மாணவர்களின் கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். இந்தியா பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் 5}ஆவது இடத்தில் இருந்தாலும், தனிநபர் வருவாயில் 136}ஆவது இடத்திலும், மனிதவள மேம்பாட்டில் 134}ஆவது இடத்திலும் உள்ளது. அதேசமயம், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றிட பிரதமர் உறுதி கொண்டுள்ளார். ஆனால், கல்வி இல்லாமல் வளர்ந்த நாடாக மாற்ற முடியாது. என்றார். முன்னதாக, கர்நாடக மாநில வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் டி.ஆர்.பரசுராமன் கௌரவ விருந்தினராக பங்கேற்று பேசினார். விழாவில், 8205 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை, முதுநிலை பட்டங்களும், 357 பேருக்கு முனைவர் பட்டமும், 65 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கமும் அளிக்கப்பட்டன. விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனாபாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதிமல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.