முன்னால் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் 18 மணிநேரத்திற்குப் பிறகு முடிந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை  நிறைவுபெற்றுள்ளது.  முக்கிய  ஆவணங்களைக் கைப்பற்றி  லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறை எடுத்துச் சென்றுள்ளனர் . 

 

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும் , பழிவாங்கும் எண்ணத்தோடும் , உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக
  நிற்பதற்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகவும்  நடத்தப்பட்ட சோதனை இது. அவர்களுக்கு தேவையானது எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கான பதிலை உள்ளாட்சித் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம் எனச் சோதனையின் முடிவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர்  கே.சி.வீரமணி . 

 



 

அதிமுக முன்னால் அமைச்சரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவுசெய்த நிலையில் நேற்று (16.09.2021) காலை 5.30 மணி முதல் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் வீடு, சகோதரர்கள் வீடு, உறவினர்கள் வீடுகளிலும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட 35 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.

 

18 மணி நேரச் சோதனைக்கு பிறகு, இரவு 11.15 அளவில் அவரது வீடு அமைந்துள்ள இடையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நிறைவடைந்தது. இதில் மொத்தம் 34 லட்சம் ரொக்க பணம் ,இந்திய மதிப்பில்  1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் , ரோல்ஸ் ராயல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள், 7 .2  கிலோ வெள்ளி பொருட்கள் , 47 கிராம் வைர நகைகள், 5 கம்யூட்டர், ஹார்ட்டிஸ்க் , வங்கிக் கணக்கு புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர்.

 

மேலும் 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட்  மணலும் பறிமுதல் செய்துள்ளதாக லஞ்ச உழைப்பு துறை அதிகாரிகள் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளனர்  .

 



 

காலை முதலே அவரது இடையம்பட்டி வீட்டருகே கூடியிருந்த கே.சி வீரமணியின் ஆதரவாளர்கள் இது திமுக அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை , உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்கப் போடப்பட்ட மாஸ்டர் பிளான் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்து லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையை எதிர்த்து கருப்பு கோடி ஏந்தி , தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனார் . இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையை முடித்துவிட்டு அரசாங்க வாகனங்களில் அதிகாரிகள் வெளியேறும்போது கோஷங்களை எழுப்பியவாறே கார்கள் மீது  தாக்குதல் நடத்தி அவர்களது எதிர்ப்பை தெரிவித்தனர் . 

 

சோதனை நடந்த அனைத்து இடங்களிலும் சோதனை முடிந்துள்ளது. வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த, வேலூர் ஒன்றிய செயலாளர் கர்ணல் வீடு, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த கே.சி.வீரமணி உதவியாளர் ஷ்யாம் ஆகிய இருவர் வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

 



 

சோதனை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு கே.சி.வீரமணி அளித்த பேட்டியில், நேரத்தை வீணடித்து அரசியல் விளம்பரம் தேடச் செய்யப்பட்டது இந்த சோதனை என்று தெரிவித்தார் .

 

இதுகுறித்து அவர் பேசியபோது, ”மேலும் அவர் வரலாற்றில் பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்துள்ளோம். முன்னால் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியம். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக 5 ஒன்றிய கழக செயலாளர்கள், கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்தியது மற்றும் அடிமட்ட உறுப்பினர்கள் வீட்டில் சோதனை நடத்தியது இதுவரை அரசியல் வரலாற்றில் எங்குமே இல்லை. இது சோதனை என்ற பெயரில் நடத்தப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி செயல்பாடு” என்றார்

 



 

”நாம் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இடையூறுகளை  ஏற்படுத்துவதற்காகவே இந்த சோதனையை  ஆளும் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியுள்ளனர் . நாங்கள் எதையும் நீதிமன்றத்தின் வாயிலாகச் சந்திக்கத் தயாராக உள்ளோம். இன்றைக்கு நடைபெற்ற சோதனையில் அவர்களுக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.  

 

நீதிமன்றம் வாயிலாக எந்த வழக்குத் தொடுத்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தேர்தல் களமானாலும், நீதிமன்றமானாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் எந்தவிதத்தில் வழிக்குத் தொடர்ந்தாலும் அதனைச் சந்திக்க வேண்டுமோ அதற்குத் தயாராகவே இருக்கிறோம். சோதனை போன்ற அச்சுறுத்தல்களையெல்லாம் கடந்த காலத்தில் கடந்து வந்தவர்கள் நமது கழக முன்னோடிகள் . 50 ஆண்டை கடந்த கட்சி அதிமுக எதிர்வரும் பல 100 ஆண்டுகளுக்கும் இயக்கம் மென்மேலும் வளர்ச்சி அடைவதற்கு உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவித்தார் .

 



 

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை சோதனையைத் தொடர்ந்து  இன்று கே சி வீரமணியின் வீட்டிலும் நடத்தப்பட்ட சோதனை காரணமாக, அதிமுக தலைமை கழக  நிர்வாகிகளிடமும் , முன்னாள் அமைச்சர் பொறுப்பிலிருந்தவர்களிடத்திலும் மற்றும் தற்போது அதிமுக கட்சியின் முக்கிய பதவியில் இருப்பவர்களிடத்திலும் பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் , விபரம் அறிந்தவர்கள் .