திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேயுள்ள சின்னகோடியூர் கிராமத்தில் பெரியார் தொண்டனான  சின்னராசு என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் கே.சி.வீரமணி (55). வீரமணியின் குடும்பமே திராவிடர் கழகப் பின்னணியுடையது. அவரது தந்தை சின்னராசுவை போலவே அவரது பெரியப்பா தங்கவேலுவும் தீவிர பெரியார் தொண்டனாக இருந்ததுடன் தமீழிழ விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். 
 
அவரது தந்தை ஆரம்ப காலத்தில் பீடி சுற்றும் தொழில் செய்து வந்து பின்னர் வீரமணியின் பெரியப்பா தங்கவேல் ஆரம்பித்த பீடி தொழிற்சாலையை வீரமணியின் குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். பிறகு காலப்போக்கில் அந்த தொழிற்சாலை முழுவதுமாக வீரமணியின் குடும்பத்தார் கட்டுப்பாட்டிற்கு வந்தது. முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளுக்காக ஆதரவு நீட்டிய தருணத்தில் வீரமணியின் குடும்பத்தினர் அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர். இதில் வீரமணி 25 ஆண்டுகளுக்கு முன்பு 1994 ஆம் ஆண்டில் அதிமுக கட்சியில் உறுப்பினராக இணைத்துள்ளார். குடும்பத்திற்கு சொந்தமாகப் பீடி தொழிற்சாலை மற்றும் குடும்பத்தின் திராவிடர் கழக பின்னணி உள்ளிட்ட பின்புலத்தால் கட்சியில் இணைந்த சீக்கிரத்திலேயே அப்போதைய ஒருங்கிணைத்த வேலூர் மேற்கு மாவட்டத்தின் ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வீரமணிக்குக் கொடுக்கப்பட்டது. அடுத்த 7 ஆண்டுகளிலேயே ஜோலார் பேட்டை ஒன்றிய அவைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டது .
 
 
2006 சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க படுதோல்வி  அடைந்ததை அடுத்து, தோல்விக்குக் காரணமான நிர்வாகிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கிய ஜெயலலிதா, வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக வீரமணியை அறிவித்தார். அப்போது தொடங்கி தற்போது வரை தொடர்ந்து மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்துவருகிறார் வீரமணி. கடந்த 2011 ஆம் ஆண்டில் முதல் முறையாக அதிமுக கட்சி சார்பில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றிபெற்று அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சட்டமன்ற உறுப்பினராக மட்டும் இருந்து வந்த நிலையில் 2013 ஆம் ஆண்டில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சரான விஜய் மீது புகார்கள் குவியவே, அவரின் பொறுப்பை பறித்து வீரமணிக்கு கொடுத்தார் ஜெயலலிதா. மேலும் 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கூடுதலாக பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை உள்ளிட்ட  இலாகாகளையும் கே.சி.வீரமணி பார்த்து வந்தார். 
 
 
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரமணிக்கு வணிகவரி மற்றும் பத்திரபதிவுத் துறை வழங்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடியும் வரை வணிகவரி துறை பதவியில் வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சொந்த தொகுதியான ஜோலார்பேட்டை தொகுதியில் 3 ஆவது முறையாகப் போட்டியிட்ட கே.சி.வீரமணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தேவராஜிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில், அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தபோது கே.சி.வீரமணி, வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து
 
இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்  2021 வரையில் அமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில்  வருமானத்துக்கு அதிகமாக 654% அளவுக்கு முறைகேடாகச் சொத்து சேர்த்துள்ளதாக, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் நேற்று (செப்டம்பர் 15) வழக்குப் பதிவு செய்துள்ளார். திமுக ஆட்சியமைத்த உடன் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர். இதனை தொடர்ந்து அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.  அவர்மீது போடப்பட்டுள்ள வழக்கில் கடந்த 5  ஆண்டுகளில்வருமத்திற்கு அதிகமாக 28 .78 கோடி ரூபாய்வரை சொத்து சேர்த்துள்ளதாக குற்றசாட்டு செலுத்துபட்டுள்ளது . 
 
கருப்பு கோடி ஏந்தி போராட்டம் 
 
இன்று காலை 6 மணி அளவில்  ஜோலார்பேட்டை அருகே உள்ள இடையம்பட்டி  வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை எழுப்பி லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு வந்துள்ளதாகத் தெரிவித்த  நடத்த வந்ததாகக் கூறி அவரது வீட்டின்  முன்பக்கக் கதவு, நுழைவு வாயில், பின் வாசல் கதவு ஆகியவற்றை இழுத்து மூடி சோதனையில் ஈடுபட்டனர்.
 
 
கே.சி.வீரமணி வீடு மட்டுமின்றி அவரது சகோதரர்கள் கே.சி.காமராஜ், கே.சி.அழகிரி மற்றும் வீரமணியின் ஆதரவாளர்களான நகரச் செயலாளர் சீனிவாசன் வீடு, ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ் வீடு, உதவியாளர் ஆர்.ஆர். ரமேஷ் வீடு, நாட்றாம்பள்ளி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் மல்லகுண்டா ராஜா வீடு மற்றும் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான திருப்பத்தூர் மற்றும் ஏலகிரி மலையில் உள்ள 'ஓட்டல் ஹில்ஸ்', ஜோலார்பேட்டையில் உள்ள திருமண மண்டபம், பீடி தொழிற்சாலை, திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள உறவினர் வீடு, குடியாத்தம் பகுதியில் வீரமணிக்குச் சொந்தமான வேளாண்மைக் கல்லூரி உள்ளிட்ட 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதை அறிந்த வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில், அதிமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கே.சி.வீரமணி வீடு முன்பு கருப்பு கோடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர் .
 
திமுக அரசைக் கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கே.சி.வீரமணி வீட்டின் முன்பாக தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும், நீட் தேர்வினால் மாணவர்கள் தற்கொலை, வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மறைக்கவே திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் இந்த ரெய்டு நடத்தி வருவதாக, குற்றம் சாட்டி அதிமுக நிர்வாகிகள் திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் ஊரக உள்ளாட்சி  தேர்தலுக்கான தேதி வெளியீட்டுல நிலையில் ,  லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என்ற போர்வையில் , திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக கட்சியை பின்னைடிவு செய்யவைக்க திமுக அரசு செய்யும் சதி திட்டம் என்றும் பல்வேறு குற்றச்சாட்டை ஆளும் திமுக அரசு மீது வீரமணியின்  ஆதரவாளர்கள் கூறி கோஷங்களை எழுப்பி வருவதால் இடையம்பட்டியில் உள்ள அவரது வீட்டின் அருகே  பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது