வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு (63), ருக்மணி (50)  கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு கீதா (31) கோடீஸ்வரி (29) அஞ்சலி (27) மற்றும் சௌந்தர்யா (17) என நான்கு மகள்கள் உள்ளனர். கீதா , கோடீஸ்வரி மற்றும் அஞ்சலிக்கு திருமணமான நிலையில், கடைசி மகளான சௌந்தர்யா தோட்டப்பாளையம் மகளிர் மேல்நிலை பள்ளியில் 2020-2021 ஆம்  கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 510 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுளார்.

 



 

சிறு வயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் 12 ஆம் வகுப்பை முடித்த சௌந்தர்யா கடந்த ஆறு மாதங்களாக நீட் தேர்வுக்காக  தனியார் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றுவந்துளார். இந்த நிலையில் இவர் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு எழுதி இருந்தார் . தான் இந்த தேர்வில் சரியான முறையில் எழுதவில்லை என்றும் மேலும் நீட் தேர்வில் பல தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதனால் தான் மீண்டும் நீட் தேர்வு எழுத நேரிடும் என்ற அச்சத்திலிருந்து வந்துள்ளார். 



 

இந்த சம்பவம் தொடர்பாக ABP நாடு செய்துகுழுமத்திடம் இறந்த சௌந்தர்யாவின் தாய் ருக்மணி தெரிவிக்கும்போது, கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த நீட் தேர்வில் பங்குபெற்ற எனது மகள் "தான் இந்த தேர்வில் சரியான முறையில் பங்கு எடுக்கவில்லை  என்றும் பல தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது . அதனால் தான் தற்பொழுது எழுதிய நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்புள்ளதால் நான் மீண்டும் நீட் தேர்வு எழுதும் சூழ்நிலை ஏற்படும் என்றும் ஒருவேளை மறு தேர்விலும்  என்னால் சரியாக தேர்வு எழுத முடியாவிட்டால் எனது மருத்துவர் கனவு வீணாகிவிடும் என்று என்னிடமும் எனது கணவரிடமும் கூறி புலம்பினார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டிலுள்ள படுக்கையறையில்  நைலான் புடவையின் மூலம் தனக்குத் தானே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 


 

எங்களுக்கு ஆண் குழந்தை இல்லாத நிலையில் எனது கடைசி மகள் சௌந்தர்யா தான் எங்களை கடைசி காலத்தில் பார்த்து கொள்வர் என்று நினைத்து இருந்தோம். எங்களை ஏமாற்றிவிட்டு இப்படி செய்து கொண்டார்" என்று கண்ணீர்  மல்கப் பேசினார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த லத்தேரி காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காட்பாடி டிஎஸ்பி பழனி ஆகியோர் இறந்த சௌந்தர்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.



 

தொடர்ந்து இறந்த சௌந்தர்யாவின் வீட்டிற்கு வேலூர் அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் SRK அப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்த்தவர்கள் இறந்த சௌந்தர்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050