தற்போது விவசாயிகள் அனைவரும் செயற்கை விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறிக்கொண்டு வருகின்றனர். தற்போது அப்படி மாறி இயற்கையான முறையில் மாப்பிள்ளை சம்பா நெற்பயிர்  விவசாயம்  செய்து வருகிறார் ஒரு விவசாயி.  திருவண்ணாமலை  மாவட்டம், புதுப்பாளையம்  கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்து வரும் மோகன் விவசாயி நிலத்திற்கு நேரடியாக சென்றோம்.


இவரைச் சந்திப்பதற்காக, ஒரு மாலைப் பொழுதில் புதுப்பாளையம் கிராமத்துக்குப் பயணம் மேற்கொண்டோம். சில்லென்ற காற்றும், சிட்டு குருவி  ஓசையும் நம்மை உற்சாகப்படுத்தியது. அவருடைய நிலத்தின் அருகே சென்றபோது கண்ணிற்கு எட்டிய தூரம் பச்சை போர்வை போர்த்தியது போன்று நெற் பயிர்கள். அதில், மாப்பிளை சம்பா தனியாக 5 அடி உயரத்தில் தெரிந்தது. பின்னர், நம்மை கண்டதும் விவசாயி மோகன், புன்னகையோடு நம்மை வரவேற்று, அவர் பயிரின் மாப்பிளை சம்பா இடத்துக்கு அழைத்துச் சென்றார். இந்த ஆண்டு மாசி மாதத்தில்  இவர் 3 ஏக்கரில் மாப்பிளை  சம்பா சாகுபடி செய்து நல்ல மகசூல் கிடைக்கும் . இதை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம், தனக்கு நிறைவான வருமானம் கிடைக்கும் என மகிழ்ச்சியோடு விவசாயி மோகன் தெரிவிக்கிறார்.


 




 


இது குறித்து இயற்கை விவசாயி மோகன் கூறும்போது, “இயற்கை உரம் பயன்படுத்தி பாரம்பரிய ரகமான மாப்பிள்ளை சம்பா அரிசியை கடந்த 4 ஆண்டுகளாக உற்பத்தி செய்கிறேன். மண்ணை வளப்படுத்த சணப்பை,  தக்கைபூண்டு, அவுரி, உளுந்து, பச்சை பயிர் ஆகியவற்றை கொண்டு கலப்பின பயிராக விதைத்து 3 மாதங்கள் வளர்க்கப்படும். சுமார் 4 அடி உயரம் வளர்ந்துவிடும். பூப்பூக்கும் சமயத்தில், நிலத்திலேயே உழவு செய்யப்படும். இதன்மூலம் நிலத்துக்கு தழை சத்து கிடைக்கும். மேலும் நாட்டு பசு மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம், கோமியத்தை கொண்டு  பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் தயாரித்து நிலத்துக்கு பயன்படுத்துகிறேன். ரசாயன உரத்தை பயன்படுத்துவது கிடையாது. ஒரு பிடி யூரியாவை கையில் பிடித்து 17 ஆண்டுகளாகிறது என்கிறார் விவசாயி மோகன். 


 




மேலும், “மகசூல் குறைவாக கிடைக்கும் ரகம். அதே நேரத்தில் சந்தையில் வரவேற்பு உள்ளதால் உரிய விலை கிடைக்கிறது. இதன் தன்மையை மக்கள் உணர்ந்து வாங்க தொடங்கினால், பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஆலைக்கு கொண்டு சென்று கைக்குத்தல் முறையில் உரித்து கொண்டு வருகிறோம். இயற்கையான எண்ணெய் தன்மை, அரிசியில் இருக்கும். பாலிஷ் செய்யப்படாது. ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பிரபல அங்காடிகளில் ஒரு கிலோ மாப்பிள்ளை சம்பா ரூ.200 வரை விற்பனை செய்கின்றனர். ஆனால், இயற்கை முறையில் தயாரித்து, ஒரு கிலோ அரிசியை 100 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  


 




நீரிழிவு பாதிப்புக்கு அருமருந்து, கணையத்தை பாதுகாக்கும், மூன்று வேளையும் மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கை விவசாயத்தின் மூலம் மலட்டு தன்மையில் இருந்து விவசாய நிலம் பாதுகாக்கப்படுகிறது. என்னிடம் மாப்பிள்ளை சம்பா அரிசி வாங்கி சாப்பிட்டும் என்னுடைய நண்பரின் சர்க்கரை நோயில் இருந்து தற்போது குணமாகி வருகிறார்‌. இதனால் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இயற்கை விவசாயத்துக்கு அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும். விதைகள் கிடைக்காமல், சில நேரங்களில் அலைகிறோம். தக்கைபூண்டு, சணப்பை, அவுரி உள்ளிட்டவற்றை இலசமாக வழங்க வேண்டும். பாரம்பரிய ரக நெல் விதைகளை வழங்கினால் உதவியாக இருக்கும். இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் இருந்து அரிசியை கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்” என்றார்.