மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இணைச் செயலாளர் வசிம் அக்ரம் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவம்  வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பகுதியில் போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டு , 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  .

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசிம் அக்ரம்.  இவர் மனித நேய ஜனநாயக கட்சி மாநில இணை செயலாளராகப் பொறுப்பிலிருந்து வந்தார். கட்சியைத் தவிர்த்து  பல்வேறு சமூக சேவை செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்  .

 



 

இந்நிலையில் இன்று இரவு 7  மணி அளவில் அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு மகரீப் தொழுகைக்காகச் சென்று,  தொழுகை முடித்துவிட்டு  வீட்டிற்கு திரும்பி  கொண்டிருந்தபோது  6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அவரை வழிமறித்து ,  பள்ளிவாசல் வளாகம்  வரை ஓட ஓட விரட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் சம்பவ இடத்திலேயே வசிம் அக்ரம்  துடி துடித்து உயிரிழந்துள்ளார்.

 

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வாணியம்பாடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர் . ஆனால் காவல்துறையினர் வருவதற்கு முன்பே அவரது ஆதரவாளர்கள் 500-க்கும்  மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி காவல் துறையினர் அங்கு மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் .

 




 


மேலும் படுகொலை செய்யப்பட்ட வசிம் அக்ரமின் இறந்த  சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட வசிம் அக்ரம்மின் ஆதரவாளர்கள் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள்  பேருந்துகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக  வாணியம்பாடி நகருக்கு வரும் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இரவு 7 மணிமுதலே வாணியம்பாடி நகரம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

 







 

இதுதொடர்பாக , திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி , சிபி சக்ரவர்த்தியை ABP  நாடு செய்திக்குழுமம் தொடர்பு கொண்டபோது , குற்றவாளிகள் கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் தற்போது கைப்பற்றியுள்ள நிலையில் இன்று இரவுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும்  இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய வாணியம்பாடி நகர் பகுதியில் , இஸ்லாமிய அமைப்பின் மாநில பொறுப்பாளர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் பகுதிகளிலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



 



 


இந்நிலையில்  முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அவரது ஆதரவாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் இதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி இந்த கொடூர கொலைக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் .