வேலூர் மாநகர பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சரமான துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.


அப்போது  அமைச்சர்  துரைமுருகன் பேசுகையில், 


நாம் பத்து ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாமல் இருந்தோம் ஆனாலும் இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளோம். தமிழகத்தில் எவன் அண்ணா பெயரை சொல்லுகிறானோ அவன் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். ஆசா பாசங்களுக்கு இடம் இன்றி இந்த கட்சியில் உள்ளேன்.  என்னை பேணிப் பாதுகாத்து அவர் வீட்டு பிள்ளையாக வளர்த்தவர் எம்ஜிஆர்  கட்சி பிரிந்த நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்தார்கள் நான்தான் போவேன் என்று கலைஞரும் கொஞ்சம் பயந்தார். ஆனால் நான் போகவில்லை. அந்நாளில் எம்ஜிஆர் முதல்வரான பிறகு ஒரு நாள் என்னை அழைத்து அமைச்சர் பதவி கொடுக்கிறேன் போய் உட்காரு என்றார் நான் முடியாது, எனது கட்சி திமுக எனது தலைவர் கலைஞர் என சொல்லிவிட்டேன். இதை பார்த்து பாராட்டினார்.எதிரிகள் கூட பாராட்டுகிற அளவிற்கு இந்த கட்சியிலே நான் இருந்ததால்தான் இன்றைக்கு அண்ணா உட்கார்த்த இடத்தில் நான் உட்கார்ந்திருக்கிறேன். 




"இளைஞர்கள் வரவேண்டும் இளைஞர்களிடம் ஒரு காலம் கட்சி போய்விடும்  இளைஞர்களுக்கு வழி விடுங்கள்"



அரசியலில் சில சந்தர்ப்ப சூழல்களில் வெறுப்பு வரும், தோல்வி வரும், அவமானம் வரும், நான் படாத அவமானமா? நான் படாத தோல்வியா? நான் சந்திக்காத எதிர்ப்புகளா? இவை வருகிற போதெல்லாம் இதற்காக நான் திமுகவில் இல்லை, இதற்காக நான் திமுகவில் இல்லை என எண்ணி, திமுக திமுக என்றால் இவை எல்லாம் பறந்து போய்விடும். எனவேதான் சொல்லுகிறேன் இயக்கத்தில் பிடிப்பு வேண்டும். "இளைஞர்கள் வருகிறார்கள் இன்றைக்கு நான் வரவேற்கிறேன். ஏனென்றால் நாங்கள் எல்லாம் இளைஞர்களாக வந்தோம். அண்ணா சொன்னார் நாற்றங்காலில் இருக்கிற பயிரை பிடுங்கி சேற்றில் நட்டால்தான் பலன் கொடுக்கும். நாற்றங்காலாகவே விட்டுவிட்டால் பாழாகிவிடும். ஆகவே தகுந்த நேரத்தில் உங்களை கட்சியில் சேர்த்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னவர் அண்ணா அவர்கள். ஆகவே சொல்கிறேன் "இளைஞர்கள் வரவேண்டும் இளைஞர்கள் இல்லாமல் ஒரு காலம் கட்சியில் போய்விடும். ஆகவே இளைஞர்களுக்கு வழி விடுங்கள்"


 




வருகிற இளைஞர்கள் கொஞ்சம் கட்சியை நினைத்து வாருங்கள்


"ஆனால் வருகிற இளைஞர்கள் கொஞ்சம் தடம் பார்த்து வாருங்கள்" கட்சியை நினைத்து வாருங்கள் வந்த உடனேயே என்ன கிடைக்கும்னு எதிர்பார்க்காதீர்கள். உன்னை விட உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அடிபட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், உதைப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், கட்சியினால் பொண்டாட்டி பிள்ளைகளிடம் கெட்ட பேர் வாங்கியவர்கள் இருக்கிறார்கள், அவர்களும் இந்த கட்சியிலே தியாகம் செய்திருக்கிறார்கள். ஆகவே தான் இளைஞர்களுக்கு நாம் வழிவிட்டாக வேண்டும். இந்த நிலைமையை நாம் நினைத்தால் தான் ஒரு இயக்கத்தை நிலைத்து நிற்க வைக்க முடியும். நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா மிசாவில் எல்லோரும் நமது கட்சியை போய்விடும் என நினைத்தார்கள் ஆனால் வெளியே வந்த பிறகு பார்த்தீர்களா. ஆகவே நம்முடைய தலைவர் அதைவிட அதிகமாக இன்று உழைக்கிறார். எம்ஜிஆருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை நீ எதிர்க்கக் கூடாது என கலைஞர் சொன்னார் இதனை நான் எம்ஜிஆர் இடம் சொன்னபோது அவர் கண்ணீர் விட்டு அழுது விட்டார்.  இருபெரும் தலைவர்களோடு மிக நெருக்கமாகவும், அண்ணாவோடும் பழகியிருக்கிறேன். ஆகவே நான் கேட்டுக் கொள்வதெல்லாம் அரசியல் என்பது பொழுதுபோக்கு மடம் அல்ல, அரசியல் என்பது வியாபாரம் அல்ல, அரசியல் என்பது கொள்கை பிடிப்பு, கொள்கை நியாயம். இந்தக் கட்சியில் நாம் இருக்கிறோம் என்பதே ஒரு பெருமைதான் என பேசினார்.




பின்னர் அமைச்சர்  துரைமுருகன் பேட்டியில், 


தேசிய கல்விக் கொள்கையில் இணைவதன் மூலம் தாய் மொழி காக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, மாற்று மொழி வந்தால் தமிழ் மொழி அழியும் என்று எங்களுக்கு சொன்னவர் அண்ணா. அண்ணா முதலமைச்சரானவுடன் மூன்று கொள்கைகளை அறிவித்தார். ஒன்று தமிழ்நாடு என பெயரிட்டார், இரண்டாவது இரு மொழிக் கொள்கைதான் தமிழ் பிளஸ் ஆங்கிலம். மூன்றாவது கொள்கை சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார். மூன்று கொள்கைகளை சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த மூன்று கொள்கைகளையும் மாற்றுகிற சக்தி எந்த கொம்பனுக்கும் கிடையாது என அப்போதே சொன்னார். வேற்று மொழி வந்தால் தாய்மொழி அழியும் என்பது எங்களின் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்திற்கு எதிர் சித்தாந்தம் உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள் என கூறினார்.


அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவை பேச்சு: 


மீட்டிங்ல யாரு பேசனாலும் நோட்டீஸில் உள்ள எல்லா பேரையும் அவர்களே, இவர்களே என நீட்டா படிச்சா எப்படி, மாவட்ட செயலாளரோ, சிறப்பு அழைப்பார்களோ அனைவரின் பெயரை சொன்னால் போதும். பேச வரவங்க எல்லாரும் அவர்களே அவர்களே, அப்போது இப்போது என பேசினால் அட யார்ரா இவன் என நினைப்பார்கள். இங்க உட்காந்துனு இருக்க எனக்கே முடியலை, கீழ உட்காருவனால எப்படி முடியும் அதை மாத்தனும் என பேசினார்.