திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய நெடுஞ்சாலை உட்கோட்டத்தை துவக்கி வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் அனைவரையும் வரவேற்றார். மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரியம் இரா.ஸ்ரீதரன், ஒன்றிய குழு பெருந்தலைவர் அய்யாக்கண்ணு, ஒன்றிய குழு துணை தலைவர் வாசுகி ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இதில் பொதுப்பணி நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் புதிய நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தை குத்துவிளக்கேற்றி பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.




 


இதில் பொதுப்பணி நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு பேசியதாவது 


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் தமிழ்நாட்டில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டார். தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இதுவரை நான்கு வழி சாலை அமைத்ததே கிடையாது. நான்கு வழி சாலை ஒன்றிய அரசும் நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைத்து வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்தில் உள்ள பாடுபட்ட சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் தற்பொழுது 62 நான்கு வழி சாலைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை கடந்த 13 ஆண்டு காலமாக சாலை அமைக்கப்படாமல் பாழடைந்து காணப்பட்டது. நான் டெல்லி சென்று துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தோம். கடிதங்கள் எழுதியதால் தான் தற்பொழுது திருவண்ணாமலை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை 90 சதவீத பணிகள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


 




 


திருவண்ணாமலை ஆன்மீக நகரம் என்பதால் அதிக அளவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால் திருவண்ணாமலை சுற்றி உள்ள சாலைகள் அனைத்தும் தற்பொழுது மேம்படுத்தப்பட்டு வருகிறது. கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் பேரவை துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி என்னிடம் நெடுஞ்சாலை துறை சார்பில் உட்கோட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது இந்த புதிய நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்தை உருவாக்கி தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் கோட்ட பொறியாளர் உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்ட 18 சாலை பணியாளர்கள் என பணியாற்ற உள்ளனர். தமிழக அரசு சார்பில் சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தாலும் கூட அந்தப் பணிகளை சிறப்பாக செய்ய அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் தேவை. தற்பொழுது இந்த கீழ்பெண்ணாத்தூர் உட்கோட்டதால் இந்த தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் மேம்படுத்துவதற்காகவும் பராமரிப்பதற்காகவும் சிறப்பாக பணியாற்றும். இதனால் இந்த தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள்” என தெரிவித்தார்.