இந்து மத நம்பிக்கைகளின்படி ஆடிமாதம் என்பது உலகையே காக்கும் சிவபெருமானுக்கே சக்தியை வழங்கும் அம்பாளுக்கு உகந்த மாதம் என்பதால், ஆடி மாதம் முழுவதும், அம்மனுக்கு திருவிழா எடுத்து வழிபட்டால் , தீய சக்திகள் , பஞ்சம் மக்களை நெருங்காது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் ஆடி மாதத்தில் திருமணம் , திருமண நிச்சயதார்த்தம் , புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப காரியங்கள் செய்தால் அம்மனின் கோவத்திற்கு ஆளாகிவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது .




 இப்படி 'ஆடிமாதம் என்றாலே அம்மனின் மாதம்' என்று சொல்லும் அளவுக்கு , அம்மன் கோவில்களில் , கூழ் ஊற்றுவது , தீ மிதிப்பது போன்ற கொண்டாட்டங்கள் அதிகளவில் காணப்படும் . இந்த மாதத்தில்  நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளையும் , அம்மனுடன் ஒப்பிட்டுப்பார்ப்பது , மக்களின் வழக்கமாகவே உள்ளது. இதுபோலவே , நேற்று மாலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பஜார் பகுதியில் அமைந்திருக்கும் , கிராம நிர்வாக அலுவலகத்தின் எதிரே 25 ஆதி உயரமுள்ள ஒரு வேப்பமரத்தில் நிகழ்ந்த விஷயத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் , இங்குள்ள வேப்பமரத்தின் அடியில் நின்று பேசிக்கொண்டு இருந்தபோது , வேப்பமரத்தில்  இருந்து திடீரென்று வெள்ளை நிறத்தில் பால் போன்ற ஒரு திரவம் அவர்கள் மேல் சொட்ட ஆரம்பித்துள்ளது .




அங்கு இருந்தவர்கள் அதனை உற்று கவனித்தபொழுது , வேப்பமர உச்சியில் இருந்த ஒரு கிளையில் இருந்து , இனிப்பு  தன்மை வாய்ந்த பால் கொட்டுவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர் . பிறகு அந்த மரத்தில் அம்மன் இறங்கி இருப்பதாகவும் , இறங்கிய அம்மன் தனது பக்தர்களுக்கு , பிரசாதமாக இந்த இனிப்பான பாலை வழங்குவதாகவும் கருதிய பொது மக்கள் , மரத்தின் அடியில் மூன்று செங்கலை வைத்து அதற்கு மஞ்சள் , குங்குமம் தடவி சூடம் ஏற்றி  வழிபட்டனர். பின்பு சொட்டு சொட்டாக வழிந்த பாலை பிரசாதம் என கருதி ,தங்கள் கைகளில் பிடித்து அவர்களது வீட்டுக்கு எடுத்து சென்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கவே , சம்பவம் அறிந்து அங்கு வந்த அணைக்கட்டு போலீசார் கொரோனா காலகட்டம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் சேராமல் அப்புறப்படுத்தினர். இதனால் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது .




வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்?


இந்த பகுதியில் இருக்கும் மக்கள் , வேப்பமரத்தில் இருந்து வழிந்த இனிப்பான பால் அம்மனின் பிரசாதம் என்று நம்பிக்கையில் இருக்க வேலூரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் ஒருவர் இந்த சம்பவத்திற்கு  அறிவியல் பூர்வமாக வேறு விளக்கத்தை தந்துள்ளார். 'பொதுவாக வேப்பமரத்தில் உள்ள மாவுச்சத்தை , வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும் . இந்த நேரத்தில்  வேப்பமரத்தின் வேர்களுக்கு அதிகப்படியான தண்ணீர் கிடைத்தால், தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து , மரத்தின் பட்டைகளை பிளந்துகொண்டு  இனிப்புப் பால் போன்று வடியும்.


மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் போன்ற திரவியம் வடிவது நின்றுபோகும். இது வேப்பமரத்தின் இயல்பான தன்மைதான் , அம்மன் இறங்கியுள்ளார் என்பதெல்லாம் மக்களின் நம்பிக்கை மட்டுமே" என்று தெரிவித்தார் .