ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற் சாலை ஊழியர் மீது கடந்த மாதம் ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் அவரது தூரத்து உறவுக்காரர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் .அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில் , தான் திருமணம் செய்ய ஆசைப்பட்ட பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தவே அமிலம் வீசியதாகப் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்  .

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம். நகர் அருகே  உள்ள ஆயிஷா-பி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அமானுல்லா, இவரது மகன் ஷமீல் அஹமத் (வயது 28)   இவர் ஆம்பூர் பகுதியிலுள்ள ஒரு  தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் . கடந்த மாதம் 22 ஆம் தேதி  சென்னையைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணுடன்
  ஷமீல் அஹமதுவுக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், கடந்த மாதம் 17 ஆம் தேதி தொழிற்சாலைக்குச் சென்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்த ஷமீல் அஹமத் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் அமிலத்தை வீசி விட்டுத் தப்பித்துச் சென்றுவிட்டார் .

 



 

முகம் மற்றும்  தோள்பட்டை பகுதியில் அமிலம் வீசப்பட்டு  படுகாயமடைந்த ஷமீல் அஹமதுவை அங்கிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து ஆம்பூர் நகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர் .

 

ஷமீல் அஹமதுவுக்கு 4 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் அமிலம் வீசி தாக்கப்பட்டதால்  அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். மேலும் இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் மட்டுமே அடைந்ததால்  ஷமீல் அஹமத்துக்கும் சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கும் திட்டமிட்ட படி  கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று சென்னையில் திருமண நடைபெற்று முடிந்தது.

 



 

மேலும் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டதால் , ஆம்பூர் போலீசார் அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர் . அப்போது அவர்களுக்கு  பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுபேர் அஹமது என்பவர் மீது சந்தேகம் எழுந்து நேற்று இரவு அவரை கைது செய்து ஆம்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர் .

 

காவல்துறை நடத்திய விசாரணையில் அமிலம் வீசிய குற்றத்தை சுபேர் ஒப்புக் கொண்டார் . மேலும் அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் , ஷமீல் திருமணம் செய்த கொண்ட பெண் தனக்கு மாமா பெண் என்றும் , அவரது பெற்றோர் சிறு வயதிலே இறந்துவிட்டதால் சென்னையிலுள்ள அவருடைய உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார் எனவும் , அவரை ஒருதலை பட்சமாகக் காதலித்து தொலைப்பேசியில் பேசி மெல்ல தனது  காதலை வெளிப்படுத்த சுபேர் தயாராக இருந்த சூழ்நிலையில் அவருக்கும் ஷமீலுக்கும் நிச்சயம் நடைபெற்று விட்டது .

 



 

இதனால் ஆத்திரம் அடைந்த நான் இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக அவரை மூன்று நாட்கள் பின்தொடர்ந்தேன் , மேலும் பேர்ணாம்பட்டில் உள்ள ஒரு இருசக்கர பழுது பார்க்கும் கடையிலிருந்து  வீட்டு தேவைக்காக அமிலம் தேவைப்படுவதாக  கூறி  , என்ஜின் ஆயில் கேனில் அமிலம் வாங்கி வந்து சம்பவத்தன்று ஷமீல் மீது வீசினேன் . ஆனால் அமிலம் சரியாக அவர்மீது படாததால் பெரியளவில் காயம் ஏற்படவில்லை . அவருக்குத் திருமணமும் தடை பெறாமல் நடந்து விட்டது என்று வாக்குமூலம் அளித்துள்ளார் .

 

சுபேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆம்பூர் நகர  காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆம்பூர் அருகே காதலித்த பெண் வேறு ஒருவருக்குத் திருமணம் செய்ய இருந்த நிலையில் திருமணத்தை நிறுத்த இளைஞர் மீது ஆம்பூர் அமிலம் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.