திருப்பத்தூரில் உயர் மின்னழுத்த ஒயர் துண்டாகி விழுந்ததால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே புதுப்பேட்டை ரயில்வே மேம்பாலம் இடத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினுக்கு செல்லும் உயர் மின்னழுத்த மின் சப்ளை வராததால் ரயில் நடுவழியில் நின்றது. இதனால் ரயில் இன்ஜின் டிரைவர் இறங்கி தண்டவாளம் பாதையில் சென்று பார்த்த போது உயர் மின்னழுத்த ஒயர் துண்டாகி தண்டவாளத்தில் விழுந்து இருப்பது தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து ரயில் டிரைவர் உடனடியாக திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் ரயில் நிலைய ஊழியர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அறுந்து விழுந்த கிடந்த உயர் மின்னழுத்த ஒயர் சரி செய்தனர். 

 

இதனால் சுமார் 1 மணி நேரம் சரி செய்யும் பணி நடைபெற்றது. அதன் பிறகு இன்று நள்ளிரவு 12.54 மணியளவில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டது. இதனால் சேலம் மார்க்கத்தில் செல்லும் ரயில்களான சென்னை ஆலப்புழா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சென்னை மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னை கோவை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில்,கொச்சிவேலி கொரக்பூர் செல்லும் கொரக்பூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 7  ரயில்கள் தாமதமாக புறப்பட்டது. இதன் காரணமாக ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.