ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி சஞ்சீவிராயன் பேட்டை முதல் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (43) ஆரணியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (45) சஞ்சீவிராயன் பேட்டை  2ஆவது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (35 ) சுந்தரமூர்த்தி, வெங்கடேசன் ஆகிய இருவரும் பட்டுச் சேலை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். 

 


 

இந்நிலையில் கன்னியப்பன் குடும்பத்துடன் ஆரணியில் நடந்த திருவிழாவுக்குச் சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பினார். வீட்டில் யாரும் இல்லாத சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு அடையாளம் தெரியாத கொள்ளை கும்பல் நேற்று நள்ளிரவு கன்னியப்பன் வீட்டின் பின்பக்க கதவைக் கடப்பாரையில் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் பீரோவிலிருந்த 4 சவரன் தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளனர். கன்னியப்பன் வீட்டைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி
  வீட்டிற்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், சுந்தரமூர்த்தி வீட்டின் பின்பக்க கதவையும் உடைத்து பீரோவில் விற்பனைக்காக தயாராக வைத்திருந்த 8 பட்டுப்புடவைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.



 

அதேபோல் 2ஆவது தெருவில் உள்ள வெங்கடேசன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மூன்றே முக்கால் சவரன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும் அந்த கொள்ளைக்கும்பல் அதே பகுதியில் உள்ள சிவா மற்றும் மணிகண்டன் வீட்டின் பின்பக்க கதவை உடைக்க முயன்றுள்ளனர் . கதவை உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் சத்தம் போட்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திமிரி ஆய்வாளர் லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

 


 

இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யபப்ட்ட நிலையில், வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.