திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 8 ஆம் தேதி 7 ஸ்டார் என்ற உணவகத்தில் தரமற்ற உணவு சாப்பிட்டு 40க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல் உபாதை காரணமாக ஆரணி  அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதில் சிகிச்சை பெற்று வந்த லோசிகா (10) என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதன் எதிரொலியாக 7 ஸ்டார் என்ற அசைவ உணவகத்தை வருவாய் துறையினர் சீல் வைத்து உணவகத்தின் உரிமையாளர் அம்ஜித் மற்றும் சமையலர் முனியாண்டி ஆகி இருவரையும் கைது செய்தனர் அதன் பின்னர் இவர்கள் இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.



அதனைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆரணி  பகுதியில் உள்ள அனைத்து சைவ மற்றும் அசைவ உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதில்  தரமற்ற நிலையில் இருந்த கோழி இறைச்சியை ரசாயன  திரவம்  ஊற்றி அழித்தனர். பின்னர் ஆரணி பகுதியில் உள்ள அனைத்து உணவக உரிமையாளரை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தயாரிதாலோ அல்லது பழைய இறைச்சியை சமைத்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். 


அதனைத்தொடரந்து இன்று 4வது நாளாக தொடர்ச்சியாக ஆரணி சுற்று வட்டார பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகத்தில், உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆரணி அண்ணா சிலை அருகில் உள்ள சூப்பர் 5 ஸ்டார் என்ற உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் கடையில் உள்ள சென்று பார்த்துள்ளனர் அங்கு காலவதியான இறைச்சி, மீன், நண்டு உள்ளிட்ட 15 கிலோ இறைச்சி வகைகளை குளிர் சாதன பெட்டியில் வைத்து அதனை மீண்டும் சமயலுக்கு பயன்படுத்துவதற்காக பதபடுத்தி வைத்து உள்ளதைக் கண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.




 


ரூ.50,000-க்கு இலவச ஸ்னாக்ஸ்.. பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடிய பானிபூரி வியாபாரி


 


அதன்பிறகு காலாவதியான இறைச்சி ,நண்டு, மீன் உள்ளிட்டவை  பறிமுதல் செய்து இராசயானம் ஊற்றி அழித்தனர். இது சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் சாதிக்பாட்ஷா என்பவர் மீது பொதுமக்களுக்கு தரமற்ற உணவை விநியோகம் செய்ததாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இது மட்டுமின்றி இதுவரையில் 8 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதித்தும் 15 கடைகளில் 50 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். காலாவதியான இறைச்சி கொண்டு உணவு சாப்பிட்ட சிறுமி இறந்த நிலையில் தற்போது அப்பகுதியில் உள்ள மற்றொரு கடையில் காலாவதியான இறைச்சி பறிமுதல் செய்தது அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.