திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் 23-வது கோடை விழா குறித்து பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் விழா நடத்துவதற்கான இடம் தேர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று பரவல் காராணமாக ஜவ்வாதுமலை கோடை விழா நடைபெறாமல் இருந்தது. இந்தாண்டு கோடைவிழா நடத்த தமிழ்நாடு அரசால் ஜவ்வாதுமலை கோடை விழா அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு விளையாட்டு துறை அமைச்சர் கலந்து கொள்வதால் 23-வது விழா கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து துறையினரும் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோடை விழா நடைபெறும் வளாகத்தில் அலங்காரப் பணிகள், பொது இடங்களில் வரவேற்பு வளைவுகள், நிகழ்ச்சிகள் விவரம் குறித்த பேனர்கள் அமைக்கப்பட வேண்டும். கோடை விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பறை உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திட வேண்டும். சுமார் 6000 பயனாளிகளுக்கு ரூபாய் 500 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவி வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.


 




 


காவல் துறை மூலமாக அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் மோப்ப நாய்களின் நிகழ்ச்சி மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த சாகச விழிப்புணர்வு நிகழச்சி ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை மூலமாக சிறப்பான மலர் மற்றும் காய்கறி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஜவ்வாதுமலையில் விளையும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள் அடங்கிய விற்பனை சந்தை அமைத்திட வேண்டும். மின்சார வாரியம் மூலமாக கோடை விழா நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சார விநியோகம் செய்ய வேண்டும். தீயணைப்புத் துறை மூலமாக தீயணைப்பு வாகனம் மற்றும் அதிகளவில் தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்திட வேண்டும். கோடை விழா அரங்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் தொடர்ந்து நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். சுகாதாரத் துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம். 108 ஆம்புலன்ஸ் சேவை. கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நாய் கண்காட்சி (Dog Show) நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். ஜவ்வாது மலை யூனியனில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 18 ஆம் மற்றும் 19ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே பள்ளி மாணவ மாணவிகளை கலந்து கொள்ள செய்ய வேண்டும். அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை விழா நடைபெறும் நாட்களில் மூடி வைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.




 


ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் மூலமாக பாரம்பரிய உணவுத் திருவிழா சமூகநலத்துறை, மகளிர் திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பெண்களுக்கான கோலப் போட்டி நடத்திட வேண்டும். விளையாட்டு துறை பொதுமக்கள், சுற்றுலா பயனிகள், மூலமாக மூலமாக இளைஞர்கள், மாணவர்கள் பங்குபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்திட வேண்டும். கலை பண்பாட்டுத்துறை. சுற்றுலாத்துறை, பள்ளி கல்வித் துறை மூலமாக கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஜவ்வாதுமலை கோடை விழாவில் மலை வாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள். பாடல்கள், விளையாட்டுகள், உணவு வகைகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகள் கவறும் வகையில் இடம் பெற செய்ய வேண்டும். கண்காட்சி அரங்கங்களில் அரசு திட்டங்கள் குறித்த விளக்க மாதிரிகள் மற்றும் குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், துறை சார்ந்த அரசு திட்டங்கள், சாதனைகள் குறித்த விளக்க கையேடுகள், துண்டு பிரசுரங்கள் தயாரித்து வெளியிட வேண்டும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.சு.தி.சரவணன் எஸ்.அம்பேத்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.