திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் தேவனந்தல் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தேவனந்தல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 64 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை என பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றார்கள்.
அரசு ஊராட்சி ஒன்றியம் பள்ளியில் அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்
இந்நிலையில் ஊராட்சி ஒன்றியம் பள்ளியில் 64 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் மாணவிகளும், மாணவர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளான கழிவறை வசதி முற்றிலும் இல்லை. மாணவிகள் அனைவரும் கழிவறைக்காக வெளியிடங்களில் செல்லும் சூழ்நிலையில் உள்ளனர். மேலும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் சரியான முறையில் பராமரிக்காததால் குடிநீர் தேக்க தொட்டியில் உள்ள சிமெண்ட் உடைந்து உள்ளதால் தொட்டியில் உள்ள கம்பி துருப்பிடித்த நிலையில் மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்து வருகிறது. இதனால் மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி மாணவர்கள் படிக்கும் கட்டித்தின் மேல்பாக சிமெண்ட் பாகங்கள் உடைந்து விழுவதாகும், இதனால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும்,மேலும் ஒரு பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் இடிக்கப்பட்டும் இதுவரை அந்த கட்டிடத்தை கட்டி தராமல் உள்ளதாகவும், இதனால் ஒரே கட்டிடத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளை படிக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், இதனை கண்டித்து பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு பள்ளி சீருடையுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு உரிய கட்டிட வசதி கழிப்பறை வசதி குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி தர பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.