சிறைத்துறை மற்றும் நன்னடத்தை அலுவலர்களுக்கான 3 மாத பயிற்சி நிறைவு விழா வேலூரில் நடைபெற்றது. இதில் 36, 5, மற்றும் 6 வது அணிகளைச் சேர்ந்தவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் ஆந்திர மாநில சிறைத்துறையின் தலைவர் அஹ்சன் ரெசா பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் அமைந்துள்ளது சிறைத்துறை மற்றும் நன்னடத்தை அலுவலர்களுக்கான பயிற்சி மையம். இங்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சிறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 3 இம்மையத்தில் பயிற்சியில் இருந்த, பணியில் இருப்பவர்களுக்கான 36 பேசு பயிற்சி, அடிப்படை தகுதிகாண் அலுவலர்களுள், சிறைத்துறை நலன் அலுவலர்களுக்கான பேசு பயிற்சி என மொத்தம் 26 பேருக்கு மூன்று மாத பயிற்சி வகுப்புகள் நிறைவு மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 26 சிறைத்துறை அலுவலர்கள் பயிற்சியினை முடித்தனர். இவர்களுக்கு சான்றிதழ்களும், சிறப்பாக பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில சிறைத்துறையின் தலைவரும், சிறைத்துறை மற்றும் நன்னடத்தை அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தின் மேலாண்மை நிர்வாகக் குழுவின் தலைவருமான அஹ்சன் ரெசா பங்கேற்று சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் ஆந்திர மாநில சிறைத்துறையின் தலைவர் அஹ்சன் ரெசா பேசுகையில், வேலூரில் உள்ள சிறைதுறை அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில் சிறைத்துறை அலுவலர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தேசிய அளவிலான தரத்தில் பயிற்சி அளிக்கப்படுவதனால் இதனை தேசிய அளவிலான பயிற்சி மையமாக மாற்ற தரம் உயர்த்தப்பட வேண்டும். இங்கு சிறை அலுவலர்கள், நன்னடத்தை அலுவலர்கள், மனநல அலுவலர்கள் ஆகியோர் ஒன்றாக பயிற்சி பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் இப்படியான பயிற்சியை பெறுவதனால் ஒருவரை ஒருவர் துறை ரீதியான விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், கைதிகளை திருத்தி நல்வழிப்படுத்தும் சிறைச்சாலையை சீர்திருத்த மையம் என்றே அழைக்க வேண்டும் மாறாக ஜெயில் என அழைக்கக் கூடாது. சிறைத்துறை அலுவலர்களுக்கு இந்த மையத்தின் மூலம் அளிக்கப்பட்ட பயிற்சியின் விளைவாக ஆந்திர மாநில சிறைகளில் இருந்த சுமிர் 460 கைதிகள் நன்னடத்தையின் அடிப்படையில் கடந்த காலங்களில் விடுவிக்கப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒருவர் கூட மீண்டும் எந்த ஒரு குற்றச் செயலில் ஈடுபட்டு சிறைக்கு வரவில்லை. அது போன்று தற்போது பயிற்சி பெற்று வெளியேறும் நீங்களும் நல்ல முறையில் சிறை கைதிகளுக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் மேலும் கைதிகளை உருவாக்குவது நமது பணி அல்ல, ஒரு கைதி மீண்டும் கைதியாகாமலும், எதோ ஒரு காலகட்டத்தில் தவறான பாதைக்கு சென்ற ஒரு நபரை நல்வழி படுத்தும் இடமாகவுமே சிறை இருக்க வேண்டும் இதுவே நமது தலையாய கடையும் ஆகும் என் பேசினார்.