வேலூர் அருகே உள்ள பெருமுகை என்ற இடத்தில் இன்று பாஜகவின் கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் தோற்றுவிட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை குறிப்பாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என கூறினார்கள் அதனை செய்யாமல் மதுக்கடைகளின் திறப்பு நேரம் அதிகரித்துள்ளது. குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது ஆனால் அதனை வழங்காமல் அந்த நிதியை வழங்க கமிட்டி போடுவதாக தெரிவித்துள்ளார்கள்.




மக்கள் விரோத ஆட்சியில் ஈடுபட்டுள்ள திமுகவைப் பற்றி தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளது அதனை தாங்க முடியாமல், பாஜக தலைவர் அண்ணாமலையை தமிழக அமைச்சர் விமர்சனம் செய்து வருகிறார், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் உள்ள அவ்வை  நகரில் வார்டு 60, 61 ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் மற்றும் பூங்கா ஆகியவற்றை அமைக்க அங்கிருந்த 120 வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்காமல் இந்த மக்கள் விரோத செயல்களில் திமுக ஆட்சி செயல்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபட்டு வருவதால் விரைவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். இந்த மக்கள் விரோத ஆட்சியை மக்கள் விரைவில் அகற்றுவார்கள் அதற்கான நேரம் கனிந்து வருகிறது. திமுக அரசு பொறுமை இழந்த அரசாக செயல்பட்டு வருகிறது. தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால் மோசமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறினார்.




காந்தி நூறாண்டுகளுக்கு முன்பு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வரும் போது கண்ணீர் விட்டார். இவ்வளவு புனிதமான கோவில் இருக்கும் இந்தப் பகுதியில், அசுத்தங்களை எல்லாம் தாண்டி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என வருத்தம் அடைந்தார். இதனை கருத்தில் கொண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் 330 கோடி மதிப்பீட்டில் காசி விஸ்வநாதர் ஆலயத்தை புனரமைப்பு செய்து 5 லட்சம் சதுர அடியாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அந்த இடங்களையெல்லாம் விலைக்கு வாங்கி, அங்கிருந்தவர்களுக்கு எல்லாம் மாற்று இடம் வழங்கப்பட்ட பின்னரே இந்த காசி விஸ்வநாதர் ஆலயம் புனரமைக்கப்பட்டடது. இதன் மூலம் புனித நகரமான காசியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார், மேலும் ஆன்மாவுக்கு புத்துயிர் ஏற்படுத்தியுள்ளார். பாரதப் பிரதமர் இப்படி செய்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய தொகுதியில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக அங்கிருந்த மக்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யாமல் அவர்களின் வீடுகளை இடிப்பது கண்டிக்கத்தக்கது எனக் கூறினார்.


கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, 2001-ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது அந்த மாநிலத்தில் மழை நீர் வீணாகாமல் இருப்பதற்காக லட்சக்கணக்கான தடுப்பணைகளை காட்டினார். இதன்மூலம் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை வீணாக்காமல் அந்த மாநிலத்தில் நீராதாரம் அதிகரித்தது. ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. குறிப்பாக காவிரியில் தூர் வாராத காரணத்தினால் புதர் மண்டி உள்ளது. மழை நீரைத் தேக்கி வைக்க போதிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. எனவே ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.




தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் அவருடை தொகுதியில் கூட பாலாற்றில் ஒரு அணைகள் கூட கட்ட வில்லையே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் தொகுதியில் மட்டுமில்லை தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் தடுப்பணைகள் கட்ட வில்லை. தமிழக முதலமைச்சர் இப்படிப்பட்டவர்களுக்கு தான் அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். குறிப்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் கதர் வாரிய துறை அமைச்சர் , கட்டப்பஞ்சாயத்து செய்பவருக்கு அறநிலை துறை அமைச்சர், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க மறுத்த துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி என அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க மறுக்கும் காரணம் காட்பாடியில் அருவி என்ற பெயரில் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார் என ஹெச்.ராஜா கூறினார்.