வேலூர் மாநகருக்குட்பட்ட ஆரணி செல்லும் சாலையில் ஓட்டேரியில் உள்ளது ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பாக நடத்தப்பட்டு வரும் இளங்கலை மாணவர்கள் பயிலும் அரசு கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதி உள்ளது. இவ்விடுதியில் வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊரிஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் தங்கி உள்ளனர். இவ்விடுதியில் கடந்த 10 ஆண்டுகளாக விடுதி காப்பாளராக பணியாற்றி வந்தந்துள்ளார் சண்முகம் என்பவர். இந்நிலையில், நேற்று முன்தினம் (டிச 15) ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் மதுமிதா திடீரென விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின் போது விடுதியின் காப்பாளர் சண்முகம் இல்லை என்றும், அவர் உடல் நலம் சரி இல்லை என்று வெளியே சென்றுள்ளாதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆதி திராவிடர் நலத்துறை ஆணையரின் திடீர் ஆய்வின் போது விடுதி காப்பாளர் விடுதியில் இல்லாததால் விடுதி காப்பாளர் சண்முகத்தை தற்காலிக பணியிடை இடை நீக்கம் செய்து ஆணையர் மதுமிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் அருகில் உள்ள பல்தொழில்நுட்ப மற்றும் பட்ட மேல்படிப்பு மாணவர்களுக்கான விடுதியின் காப்பாளராக உள்ள கருணாநிதி என்பவரை தற்காலிகமாக காப்பாளராக ஆதி திராவிடர் விடுதிக்கு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே பணியாற்றிய விடுதியின் காப்பாளர் சண்முகத்தையே மீண்டும் தங்கள் விடுதி காப்பாளராக பணியமர்த்த வேண்டும் என்று விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்திற்க்கு வந்து முற்றுகையிட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் இது தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கும் படியும், தர்ணா போராட்டத்தை கை விடும்படியும் கூறியுள்ளனர். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு காவல் துறையினரின் அறிவுரையை ஏற்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேரில் சென்று தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட நேர்முக உதவியாளர் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விடுதி காப்பாளரை மாற்றக்கோரி மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டிருந்த போது மாணவர்களுக்கு அலுவலக ஊழியர்கள் டீ கொடுத்து உபசரித்தனர்.