திருவண்ணாமலை (Tiruvannamalai News):  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்றாலே பட்டுக்கு பெயரெடுத்த ஊராகும் காஞ்சிபுரம் பட்டுக்கு நிகராக ஆரணி பட்டு விளங்கி வருகின்றது. மேலும் ஆரணி நகரப்பகுதி, சேவூர், தேவிகாபுரம், எஸ்.வி.நகரம், முள்ளிப்பட்டு, மூனுகபட்டு , ஒண்ணுபுரம் உள்ளிட்ட சுற்றி வட்டார பகுதிகளில் 100-க்கும்மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு நெசவாளர்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.மேலும் கடந்த சில மாதங்களாக ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கைத்தறி பட்டு புடவை நெய்வர்த்க்கான வடிவமைப்பை வைத்து விசைதறியில் (பவர்லூம் ) புடவை நெய்ந்து அதனை கைத்தறி பட்டு என்று கூறி குறைந்த விலையில் விற்பனை செய்யபட்டு வருவதாகவும், இதனால் கைத்தறி பட்டு நெசவாளர்கள்வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக கைத்தறி பட்டு நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


 


 




இதனையொடுத்து கைத்தறி நெசவாளர்கள் கடந்த வாரம் விசைத்தறியை தடை செய்ய கோரி மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் ஓருநாள் அடையாள உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆரணி பகுதிகளில் தொடர்ந்து விசைத்தறி இயங்குகின்றன. இதனால் இன்று தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி நெசவாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆரணி நகரம் ,சேவூர் முள்ளிபட்டு, வேலப்பாடி,கீழ்பட்டு, நெடுங்குணம், தேவிகாபுரம் திருமணி, வாழைப்பந்தல், கொருக்காத்தூர், மெய்யூர் , ஒண்ணுபுரம், துருவம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தியும் நெசவாளர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 




நெசவாளர்களின் கோரிக்கையான பட்டு கைத்தறி ரகங்களை விசைத்தறையில் பவர்லூம் உற்பத்தியை செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும், கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 அமல்படுத்த வேண்டும் என்றும், அதிகாரிகள் விசைத்தறிகளை ஆய்வு செய்வதை வெளிபடை தன்மையாக ஆய்வு செய்ய வேண்டும், அண்டை மாநிலங்களில் விசைத்தறியில் உற்பத்தி செய்யும் பட்டு ரகங்களை தடை செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் எடுத்துரைத்தனர். மேலும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்த போவதாக கைத்தறி நெசவாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டு கைத்தறி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் குருராஜாராவ் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், பாபு, அப்பாசாமி ஜெயக்குமார் அன்பு கருணாகரன் இளங்கோ பரணி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர்.