திருவண்ணாமலை (Tiruvannamalai crime) திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பல கோடி மதிப்பீட்டில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு தரமற்ற முறையில் தார் சாலைகளும், சிமெண்ட் சாலைகளும் அமைத்திருக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள முத்தரசம்பூண்டி கிராமம் முதல் சோழவரம் கிராமம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு "தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை" அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. இதனை தார் சாலை அமைக்க கண்ணன் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகி தவக்குமார் என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். 




 


தரமற்ற சாலை:


அதைத் தொடர்ந்து தாரை கலக்காமல் தரமற்ற முறையில் தார் சாலை போடப்பட்டதால் தார்சாலை மண் பாதையாக மாறி ஜல்லிக்கற்கள் முழுவதும் சாலையின் மேலே சிதறி கிடக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


இது மட்டும் இல்லாமல் தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையை கையாள் தோண்ட தோண்ட ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் தார் சாலை அரை அடி ஆழத்திற்கு உள்ளே சென்றும் விரிசல் ஏற்பட்டும் காணப்பட்டு வருகிறது. தரமற்ற முறையில் போடப்பட்ட இந்த தார் சாலையை இதுவரை கண்டுகொள்ளாமல் உள்ள ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட ஆட்சியரும் துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரும் வேடிக்கை பார்த்து வரும் சம்பவத்தால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 




கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ள தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொகுதியில் துரிஞ்சாபுரம் திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகி தவக்குமார் ஒப்பந்தம் எடுத்து மேற்கொள்ளப்பட்ட தார்சாலை தரம் இல்லாமல் போடப்பட்ட சம்பவத்தால் சமூக ஆர்வலர்களிடையே தொகுதி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட தார் சாலை முறையாக போடப்பட்டுள்ளதா? என்பதை கூட துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரும், வட்டார வளர்ச்சி ஆய்வாளரும் ஆய்வு மேற்கொள்ளாதது இரண்டே மாதத்தில் தார் சாலை மண் பாதையாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. ”ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.”