"பாடபுத்தகத்தில் இருக்கும் பாடங்களை  மனப்பாடம் செய்து  மாணவர்களுக்கு முன் கடமைக்கு என்று ஒப்பிச்சிட்டு போறது ஆசிரியர் பணி அல்ல , ஒவ்வொரு மாணவருக்கும்  என்ன தனித்திறன் இருக்கிறது என்பதை  ஆராய்ந்து  ,  ஒவ்வொரு மாணவரும்  "நான்  ஒரு தகுதியான மாணவன் தான்!" என்ற தன்னம்பிக்கையை விதைப்பது தான்  முழுமையான ஆசிரியர் பணி , என்பதை முழுசா நம்பறவ சார் நான்!" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட விழுப்புரத்தை  சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ந கி ஹேமலதா (52 ). கடந்த 30 வருட காலமாக விழுப்புரம் மாவட்டத்தில் அனைவராலும் ஆசிரியையாகவும், சமூக ஆர்வலராகவும் அறியப்பட்டு வருகிறார் .




விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஹேமா டீச்சர்- னா தெரியாத ஆளே இருக்கமாட்டாங்கனு சொல்லுற அளவுக்கு , சமூகசெயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு இருக்கிறார் இந்த அரசு பள்ளி ஆசிரியை  .


சிறுவயதில் இருந்தே காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது சிறுவயசு கனவை , தான் ஒரு அரசு பள்ளியில் படித்தபின்னர் , போலீசாகவேண்டும் என்ற தனது கனவை மாற்றிக்கொண்டு ஆசிரியராகி அரசுப்பள்ளி  மாணவர்களின் கல்வி தரத்தை மற்ற தனியார் பள்ளிக்கு நிகராக மேம்படுத்த வேண்டும்  என்ற லட்சியத்தோடு எம் ஏ , பி எட் முடித்த ஹேமா டீச்சர் .  1992 ஆம் ஆண்டு முதன்முதலில் தனது ஆசிரியை பணியை  விழுப்புரம் நகரில் உள்ள மகாத்மா காந்தி , அரசு உதவிபெறும் பள்ளியில் இருந்து தொடங்கியுள்ளார்  .




அதன் பிறகு 20 வருட காலம் பல்வேறு அரசு இடைநிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த இவர் , கடந்த 9 ஆண்டுகளாக செஞ்சி அருகேயுள்ள செ.குன்னத்தூர் அரசு உயர்நிலை பள்ளியில் பணி  புரிந்துவருகிறார். அவருடைய அடையாளத்தை வெறும் ஆசிரியை ஆகமட்டும் இல்லாமல் , சமூக செயல்பாட்டாளர் , குடும்பநல ஆலோசகர்  ,தெருக்கூத்து கலைஞர்  என பன்முகத்தன்மை கொண்டவராக செயல்பட்டுவருகிறார் .




மேலும் இயற்கைப் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு முதல் தன்னார்வலராக இருக்கிறார்  ஆசிரியர் ஹேமலதா . 2018 ஆம் ஆண்டு கஜா புயலின் பொது , விழுப்புரம் மாவட்டத்தில் , செஞ்சிலுவை தொண்டு நிறுவனம் மூலம் திரட்டப்பட்ட நிவாரண பொருட்களை தனி ஒரு பெண்மணியாக , புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்  .


அதனை தொடர்ந்து 2020 ஆம் வருடம் கொரோனா முதல் அலை தொடக்கத்தில் இருந்து , வேலையிழந்து  பொருளாதார அளவில் மிகவும் பின்தங்கிய  , தினக்கூலி தொழிலார்கள் , நரிக்குறவர்கள் , பழங்குடி இருளர்கள் , வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் வசித்துவருபவர்கள் என வறுமைக் கோட்டுக்குக் கீழேயுள்ள  மக்களுக்கு உணவு வழங்குவது , மாஸ்க் சானிடைசேர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது ,மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து  சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து , மாற்றுத்திறனிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது என  ஒரு முன்கள பணியாளர் போல் செயல்பட்டு வருகிறார் .




மேலும் விழுப்புரம் மாவட்ட மக்களிடையே கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த , விழுப்புரம் மாவட்ட பள்ளிகல்வி துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து , தெருக்கூத்து கலைஞர் போல் வேடமிட்டு மக்களிடம் கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வுகளையும் , நோய் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் , தெருக்கூத்து மூலம் மக்களிடம் சேர்த்து வருகிறார் .


பிரதமர் மோடி பாராட்டிய ஹேமா டீச்சர் !


கடந்த 9  வருடமாக செ.குன்னத்தூர் கிராம அரசு உயர்நிலை பள்ளியில் 10  ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடம் கற்பித்து வரும் ஹேமலதா டீச்சர் , சென்ற 2020 ஆம் வருடம் கொரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரம் அடைந்து பள்ளிகள் மூடப்படவேண்டும் என்று தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட  காலகட்டத்தில் , தனது வகுப்பு மாணவர்கள் எங்கு பள்ளிகள் மூடலால் பாதிக்கப்படுவார்களோ என்று எண்ணி , 10  ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்திலுள்ள 53 அத்தியாயங்களையும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக  அனிமேஷன் (இயங்குபடம்) - ஆக மாற்றி , தனது வகுப்பிலுள்ள 29  மாணவர்களுக்கும் , அனிமேஷனாக மாற்றிய  பாடத்தினை பென் டிரைவ் கருவியில் ஏற்றி 29 மாணவர்களுக்கும் தனித்தனியே கொடுத்துள்ளார் . இதன்மூலம் மாணவர்கள் பென் டிரைவில் உள்ள பாடத்தினை , லேப்டாப் , இன்டர்நெட் போன்றவற்றை தேடி சிரமப்படாமல்  , வீட்டில் இருக்கும் டி வி- யிலேயே பெண் டிரவ்யை செலுத்தி பாடத்தை எளிமையாக கற்க முடியும் .




இவருடைய இந்த புதுமையான முயற்சி , பத்திரிகை செய்திகள் மூலம் மத்திய-மாநில அரசுகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  , கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி , பிரதமர் நரேந்திர மோடி ,  'மன் கி பாத்' உரையில் ஆசிரியை ஹேமலதாவின் இந்த புதுமையான முயற்சியினை வெகுவாக பாராட்டினார் .



இது மட்டுமில்லாமல் , 2019 ஆம் ஆண்டு அவரது பள்ளிமாணவர்களுக்கு சொந்த செலவில் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தனது சொந்த செலவில் வாங்கி மாணவர்கள் பயனடையும் முறையில் அவரது சேவைக்காக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் கல்வியில் புதுமை ஆசிரியை என்ற விருதையும்  , 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகத்தால் நல்லாசிரியர் விருது , 2021 ஆம் ஆண்டு அவள் விகடனின் கல்வி தாரகை விருது மற்றும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக்ஸ் ஆப் ரெகார்டஸ் மூலம் , 10 ஆம் வகுப்பு  தமிழ் பாடத்தின் அனிமேஷன் வீடியோவாக உருவாக்கிய உலகின் முதல் அரசு பள்ளி ஆசிரியர் என்ற விருதினையும் பெற்றுள்ளார் .




கடந்த 25 ஆண்டுகளாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இலவசமாக குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பெற்ற பெண்களுக்கு குடும்பநல  ஆலசோனை வழங்கிவரும் ஹேமலதா ஆசிரியர் இதுவரை 1350 மேற்பட்ட  பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்ப பிரச்சனையுடன் வரும் பெண்களை தங்களது குடும்பத்துடன் சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கி  அவர்களை குடும்பத்துடன் இணைத்து வைத்துள்ளார் .


பாரத பிரதமர் நரேந்திர மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் தன்னை பாராட்டியது மிகவும் தெம்பளிப்பதாக ABP நாடு செய்தி குழுமத்திடம் தெரிவித்த ஆசிரியர் ஹேமலதா , ஏழ்மை நிலையில் வாடும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள  மக்களுக்கான தனது சேவையும் , அரசு பள்ளி மாணவர்களை கல்வியில் மேம்படுத்துவதற்கான தனது முயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் .




மேலும் இந்த தருவாயில் அவர்பெற்ற இந்த விருதுகள் மற்றும் பாராட்டுகளுக்கு தன்னுடன் பக்கபலமாய் இருந்த  குடும்பத்தாருக்கும்  மற்றும் அனைத்து பள்ளி கல்வித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் , தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ஆசிரியர் ஹேமலதா