வேலூர் முன்னாள் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் (65) உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். காட்பாடி திருநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த செங்குட்டுவனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காகச் சென்னை உட்பட பல மருத்துவமனைகளில்
  சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் செங்குட்டுவன் மரணமடைந்தார்.

 



 

அவருடைய உடல் காட்பாடி திருநகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது . இன்று மாலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எரிவாயு தகன மேடையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பின்னர் வேலூரில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற காரணமாக இருந்தவர் செங்குட்டுவன்.

 


1980ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் பயின்ற மாணவர் பருவத்திலேயே தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்ட செங்குட்டுவன், 1983ஆம் ஆண்டிலிருந்து வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 2001 முதல் 2006 வரை வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராகவும், 2011 முதல் 2014 வரை பொது வழக்கறிஞராகவும் பதவி வகித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர், தொழில்துறை நிலைக்குழு உறுப்பினர் , சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் குழு உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.


 



 

அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது அ.ம.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் சசிகலா - டிடிவி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சியின் நிர்வாகியாக பதவி வகித்து வந்தார் பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். செங்குட்டுவனின் மனைவி ஜெயந்தி வேலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார் அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

 

உயிரிழந்த வேலூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவனின் உடலுக்கு அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.