இந்தியச் சுதந்திரத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையிலிருந்து தொடங்கியது என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் , சுதந்திரம் பெற்றவுடன் டெல்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி குடியாத்தத்தில்  தயாரித்தது என்ற வரலாற்று உண்மை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கச் சாத்தியம் இல்லை. சுதந்திர இந்தியக் கனவு நனவாகும் நிலையில், செங்கோட்டையில் ஏற்றுவதற்கான முதல் தேசியக் கொடியை, அந்தக் காலத்திலேயே கைத்தறியில் புகழ்பெற்று விளங்கிய குடியாத்தம் நகரில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

 



 

இதையடுத்து, மத்திய அரசு செயலாளர், அதிகாரிகள் குடியாத்தம்  நகருக்கு வந்தார் குடியாத்தத்தில் 1932-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள் நகராட்சித் தலைவராக இருந்தவர் குடியாத்தம் பிச்சனூர் பேட்டையைச் சேர்ந்த ஆர். வெங்கடாச்சலம்  இவர் இந்துஸ்தான் ஃபாப்பிரிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் மூலம் மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான, பிங்கலி வெங்கையா (பிங்கலி வெங்கையா தான் இந்தியத் தேசியக் கொடியை வடிவமைத்தவர் ) வடிவமைத்த தேசியக் கொடியைக் கைத்தறியில் தயாரிக்கும் பணி பிச்சனூர் பேட்டை வெங்கடாச்சலத்திடம் ஒப்படைக்கப்பட்டது .

 



 

 12 அடி அகலம், 18 அடி நீளத்தில் மொத்தம் 3 கொடிகள் கம்பீரமாக உருவாக்கப்பட்டன. அந்த தேசியக்கொடிகளுள் ஒன்றுதான் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட்  15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றவுடன் டில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது. இதே கொடியில் ஒன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் ஏற்றப்பட்டது. இதில் செயின்ட் கோட்டையில் ஏற்றப்பட்ட கொடி கோட்டை வளாகத்தில் உள்ள தொல்லியல் ஆய்வுத் துறை அருங்காட்சியகத்தின் இரண்டாம் தளத்தின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

 

இதுதவிர, அன்று நாடு முழுவதும் ஏற்றுவதற்காக 10 லட்சம் கொடிகள் குடியாத்தம் வெங்கடாசலத்தின் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதற்காக, குடியாத்தம் நெசவாளர்கள் மட்டுமின்றி, இதர மக்களும், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்களும் உறுதுணையாக இருந்தனர்.

 



 

வீதிகள், கிராமங்கள், மைதானங்களில் கொடிகள் தயாரிப்புக்கான பணிகள் தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்றன. குறைந்த நேரத்திலே பல ஆயிரக்கணக்கான தேசியக்  கொடிகள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்ட கொடிகள் தான் அன்று இந்தியா முழுவதும் பட்டொளி வீசிப் பறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, முன்னாள் முதல்வர் பக்தவச்சலம்  போன்ற பல தேசத் தலைவர்கள் அவர்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர் .

 



 

இதையடுத்து, பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றவுடன் வெங்கடாசலத்திற்கும், அவருடைய
  இந்துஸ்தான் பாப்பிரிக்ஸ் நிறுவனத்துக்கும் ஜவஹர்லால் நேருவின் தனிச்செயலாளர் தர்லோக் சிங்  என்பவர் மூலமும்  மற்றும் சென்னை ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய  கொடிக்காக , சென்னை ஜார்ஜ் கோட்டையிலிருந்தும்  தனித்தனி நன்றி  கடிதம் வெங்கடாசலத்திற்கு அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .