தமிழகத்தில் தஞ்சைக்கு அடுத்த படியாக நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளது. சென்ற ஆண்டு வரையில் தமிழக அரசால் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டு அதனை வாங்கி வந்தனர். தற்போது ஒன்றிய அரசு நெல் கொள்முதல் செய்ய தேசிய கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் நெல் கொள்முதல் நிலையங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகின்றது. இதனால் கொள்முதல் நிலையங்களில் நெல் வினியோகம் செய்யும் விவசாயிகளுக்கு பண பட்டுவாடா செய்ய சுமார் 45 நாட்களுக்கு மேலாவதாகவும், அந்த நெல்கொள்முதல் செய்யும் நிறுவனம் அரவைக்கு தேவையான அளவில் நெல் மட்டுமே கொள்முதல் செய்வதாகவும் கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் செயல்படும் போது 15 நாட்களில் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்ததாகவும், விவசாயிகளிடம் இருந்து கணக்கில்லாமல் நெல் கொள்முதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் தோசை மாவை ஊற்றி அதில் என்எல்சி, என்சிசிஎப்,என்சிசிஇ, என்சிசிஎப், ஆகிய பெயர்களை தோசை மாவில் விவசாயிகள் எழுதி நூதன முறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேசிய கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் வாக்கடை புருஷோத்தமன்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு செல்லக்கூடாது என்றும் கோரிக்கை கடலூரில் என்எல்சி நில எடுப்பு விவகாரத்தில் நடைபெறும் போராட்டங்களை விட திருவண்ணாமலை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எடுத்துச் செல்ல முயன்றால் மிக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் மனு அளித்துள்ளோம் என்றும், அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உடனடியாக இதற்கு தீர்வு காணவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.