திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீரென அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். வேளாண் துறை துணை இயக்குநர் அன்பழகன், நுகர்புற வாணிப கழகம் தேன்மொழி மற்றும் அரசு துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த விவசாயிகள் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில், விவசாயிகளின் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு பெரும்பாலான அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. அதிகாரிகள் கூட்டங்களில் கலந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரி உடனடியாக வரவேண்டும் எனவும் விவசாயிகள் எழுந்து நின்று அதிகாரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரி உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரை வரச்சொல்லியதாக தெரிவித்தார்.


 




 


விவசாயி ஒருவர் பேசுகையில், திருவண்ணாமலை தாலுக்காவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் காட்டாம்பூண்டி பகுதியில் உள்ளது. நூக்காம்பாடி பகுதியில் இருந்து காட்டாமூண்டிக்கு நெல் மூட்டைகளை எங்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை மிகவும் சிரமப்படுகிறோம். அதனால் நார்த்தாமூண்டி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு அதிகாரி, நாங்கள் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார். விவசாயி; திருவண்ணாமலை மாவட்டம் முழுக்க முழுக்க  விவசாயம் சார்ந்த மாவட்டம் ஆகும். இங்கு எந்தவித தொழிற்சாலைகளும் இல்லை எதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் சுங்கச்சாவடி அமைத்தார்கள். அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மாவட்டம் முழுவதும் யூரியா தட்டுபாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள தனியார் யூரியா கடைகளில் விற்கப்படும் யூரியாவை வாங்கவேண்டும் என்றால் கூடுதல் இணைபொருட்கள் வாங்கினால் மட்டும் யூரியா வழங்கப்படுகிறது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் அந்த கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். 


 




மேலும், அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்றுக்கொண்டு நடத்த வேண்டும். மழை காலம் நெருங்கியுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களையும் விரைவில் தூர்வார வேண்டும். கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று தாலுகா அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்திற்கும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கண்டிப்பாக வரவழைத்து விவசாயிகளின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர். மேலும் தனிநபர் கோரிக்கையை விவசாயிகள் மனுவாக அளித்தனர். விவசாயிகள் வலியுறுத்தி இருந்த கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.