திருவண்ணாமலை காந்தி சிலை அருகில் இடதுசாரிகள் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைக்கும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தை தொடங்கி வைத்து கோஷங்கள் எழுப்பினார். அதனைத் தொடர்ந்து ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “மதத்தின் அடிப்படையில் வெறுப்புணர்ச்சியை வளர்க்கும் பிரிவினைவாதிகளுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்று வகையில் இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


 




 


ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் நாட்டில் மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவு உணர்வுகளை வளர்கின்றது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் அடையாளம். இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே உணவு, ஒரே மொழி என்ற பிரிவினை அரசியலை செய்பவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை கொண்டு வர வேண்டும் என்று கூறி இருக்கிறார். நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை கொண்டுவர வேண்டுமென பார்லிமென்ட் குழு மூலம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் போது, ஆங்கிலம் இல்லாமல் இன்று முன்னேற்றம் கிடையாது. இந்திய மாணவர்கள் உலகம் முழுவதும் மென்பொருள், மருத்துவத்துறைகள் என எல்லாத் துறைகளிலும் சிறந்த வல்லுனர்களாக திகழ்கின்றனர்.


 




இந்தியாவில் ஆங்கிலத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாடு எடுத்தால் நம் மாணவர்களின் எதிர்காலம் சூன்யம் ஆகிவிடும் என்பது எல்லோருடைய கருத்து. எந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவெடுக்க வேண்டியது மாணவர்கள் தான். மக்களை பிரிப்பதற்கு பார்க்கின்றனர். நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானாவர்கள் அல்ல. இந்தி, சமஸ்கிருதம் படித்தவர்கள் தான் நாட்டில் முன்னேற முடியும் என்று புதிய கல்வி கொள்கை மூலம் கொண்டு வர முயற்சிக்கின்றனர். இந்தி திணிப்பில் இதே அணுகு முறையை மத்திய அரசு தொடர்ந்தால் 1965-ல் நடந்த மொழிப்போரை விட வீரியமான மொழிப்போர் வெடிக்கும். தமிழக கவர்னர் அவரது கடமைகளில் செயல்படாமல் உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டு வரும் தீர்மானங்களுக்கு முழு வடிவம் கொடுப்பது போன்று கவர்னரின் செயல்பாடு இருக்க வேண்டும். .திருவள்ளுவருக்கு காவி வேடம் அணிவித்து ஒரு மதத்திற்குள் சுருக்க நினைக்கின்றனர். சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 16 மசோதாக்கள் இன்றைக்கு நிறைவேறாமல் இருப்பதற்கு முழு காரணம் அவர் தான். இந்தியாவில் உள்ள ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் கவர்னர் போன்ற ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள் மதத்தால் நாட்டை பிரிக்கின்ற முயற்சியில் இறங்கி உள்ளனர். கவர்னர் மத ரீதியான கருத்துகளை சொல்வது தவறு. மேலும் திராவிடத்திற்கும் ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றார். அதுவும் முற்றிலும் தவறானது” என்று பேசினார்.