ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை அடுத்த காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் இவரது இளைய மகள் கஜலட்சுமி (30) மற்றும் நாயக்கன் தோப்பு, காவனூர் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அருண் குமாருக்கும் (36) திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அருண்குமார் தினம்தோறும் வீட்டிற்குக் குடித்துவிட்டு வந்து மனைவி கஜலட்சுமியைத் துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் திருமணத்தின் போது கஜலட்சுமியின் அப்பா ஆறுமுகம் தன் இளைய மகளுக்கு சுமார் 35 பவுன் நகையை வரதட்சணையாகக் கொடுத்துள்ளார். இந்த நகை அனைத்தையுமே விற்று அருண்குமார் குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அருண்குமார், மதுபோதையில் கஜலட்சுமியைப் பிரம்பு மற்றும் கையில் கிடைக்கும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கி வந்துள்ளார் .
தனக்கு கொடுத்திருந்த வரதட்சணையோடு தனக்கு மேலும் இரண்டு லட்சம் ரூபாய் வரதட்சணை தர வேண்டுமென வலியுறுத்தி தினந்தோறும் துன்புறுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து இரும்பு பைப் மற்றும் பிரம்பால் தனது மனைவியை அடித்துள்ளார். இதில் கஜலட்சுமி அடி தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். பிறகு அவர் உடல் முழுவதும் ரத்தம் சிவந்து காயங்களுடன் காணப்பட்டது.
அருகில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் கஜலட்சுமியின் குடும்பத்தாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் ஆற்காட்டுக்கு விரைந்து வந்த குடும்பத்தினர் கஜலட்சுமியைப் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மனைவி கஜலட்சுமியை அடித்த முன்னாள் ராணுவ வீரர் அருண்குமார் தலைமறைவாக உள்ளார்.
மேலும் இது தொடர்பாக கஜலட்சுமி மற்றும் அவரது பெற்றோர் அருண்குமார் தனது மனைவி கஜலட்சுமியை துன்புறுத்தி அடிப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் ஆற்காடு காவல் நிலைய போலீசார் முன்னாள் ராணுவ வீரர் அருண்குமார் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.