தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஜக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மணிமாறன் மனைவி கமலா வயது (55) என்பவர் காது செவித்திறன் குறைபாடு மற்றும் காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளால் சிரமப்பட்டு வந்தார். மேலும் கமலா சிகிச்சைக்காக பல்வேறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் அதிகமான பணத்தை செலவு செய்துள்ளார். இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக மேல் சிகிச்சைக்காக பணம் இல்லாததால், மிகுந்த சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பென்னாகரத்தில் உள்ள மாவட்ட  அரசு  தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

 

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கமலாவிற்கு காது-மூக்கு-தொண்டை  நிபுணரும் மருத்துவருமான பாலாஜி பரிசோதனை மேற்கொண்டார். தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சிடி ஸ்கேன் ரத்த பரிசோதனை ஆகிய சோதனைகளை செய்து இவருக்கு  இடை செவி  (CORTICAL MASTOIDECTOMY) என்ற பிரச்சனை மற்றும் உள்புற எலும்பில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.



 

இதனை தொடர்ந்து முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனை இணை இயக்குனர்  அறிவுறுத்தலின் பேரில் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். இந்த அறுவை சிகிச்சை சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது. இதனையடுத்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டு, காது கேளாமை பிரச்சினை மற்றும் காதில் சீழ் வடிதல் பிரச்சனை சரி செய்யப்பட்டது. இதனால் காதில் சீழ் வடிதல் மற்றும், செவி திறன் குறைபாடோடு அவதிப்பட்டு வந்த கமலா தற்போது நலமுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த அரசு மருத்துவ குழுவினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.



 

பென்னாகரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சரின் மருத்தவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது. ஆனால் இந்த அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனைகளில் ரூ.1 முதல் 2 இலட்சம் வரை செலவாகும். இதனால் பொதுமக்கள் இந்த சிகிச்சை பெற, அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறலாம். எனவே இதுபோன்ற பாதிப்புகள், குறைபாடுகள் உள்ள பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக பெற்று கொள்ளலாம் என மருத்துவ துறையினர் தெரிவித்துள்ளனர்.