அரூர் பருத்தி சொசைட்டியில் ஏலம் விடுவதில் முறைகேடு நடப்பதாக தெரிவித்து தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, தருமபுரி, கடத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், தங்களின் விவசாய நிலங்களில் விளைந்த பருத்திகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.  இந்த பருத்தி ஏலத்தில், விவசாயிகள் கொண்டு வரும் பருத்தி மூட்டைகளை தரம் பிரித்து, கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலமாக ஏலம் விடப்படுகிறது. இந்த வாரம் பருத்தி வரத்து அதிகரித்ததால், இரண்டு இடங்களில் பருத்தி மூட்டைகள் வைக்கப்பட்டு ஏலம் நடைபெற்றது.  இந்த நிலையில் ஒழங்குமைறை விற்பனைக்காக கூடத்தில் நேற்று  நடைபெற்ற பருத்தி ஏலத்தில், விவசாயிகள் கொண்டு வந்த மூட்டைகளின் எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாகவும், மூட்டைக்கு 10 கிலோ எடையை குறைத்து எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. இதனையறிந்த விவசாயிகள் இதை தட்டிக் கேட்டுள்ளனர். அப்பொழுது ஏலம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்களுக்கு, விவசாயிகளுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது விவசாயி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.



 

இதனால் ஆத்திரமடைந்த  200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள 3 ரோடு சாலை சந்திப்பில், அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல் துறையினரிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் விவசாயிகளை தரக் குறைவாக பேசியதால், போராட்ட இடத்தில் காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஆனது.



 

மேலும் ஆத்திரமடைந்த விவசாயிகள் காவல் உதவி ஆய்வாளரை, தாக்கவும் முற்பட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் அந்த உதவி காவல் ஆய்வாளரை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தருமபுரி-சேலம் - சென்னை - திருவண்ணாமலை, பெங்களூரு செல்லக் கூடிய தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கு கிலோமீட்டர் அளவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் நேற்று இரவு பருத்தி ஏலம் நிறுத்தப்பட்டது. மேலும் புகார் தெரிவிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பருத்தி மூட்டைகளை அளவீடு செய்து, ஏலம் விடப்படும் அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால்,  அரூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.