தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்த நிலையில், புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வார்டு மறுவரை செய்யப்படாத காரணத்தால் இந்த 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த மாதத்திற்குள் இந்த மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட  நிலையில்   திருப்பத்தூர் மாவட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி  வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா வெளியிட்டார்.



 

 

வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் இன்று முதல் மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களிலும் ஆண் வாக்காளர்கள் 3,29,959 பெண் வாக்காளர்கள் 3,34,115, மற்றவர்கள் 34 என மொத்தம் 6,64,108 வாக்காளர்கள் உள்ளனர்.

 

ஆலங்காயம் ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் 47,165 பேரும் பெண் வாக்காளர்கள் 47,141 பேரும் மற்றவர்கள் 5 பேரும் என மொத்தம் 94,311 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஒன்றியத்தில் 161 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளது. ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் 68,350 பேரும் பெண் வாக்காளர்கள் 68,894 பேரும் மற்றவர்கள் 6 பேரும் என மொத்தம் 1,37,250 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஒன்றியத்தில் மொத்தம் 242 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளது.

 



 

கந்தலி ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் 59,513 பேரும் பெண் வாக்காளர்கள் 59,704 பேரும் மற்றவர்கள் 9 பேரும் என மொத்தம் 1,19,226 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஒன்றியத்தில் 199 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளது. மாதனூர் ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் 59,174 பேரும், பெண் வாக்காளர்கள் 63,320 பேரும், மற்றவர்கள் 11 பேரும் என மொத்தம்ன் 1,22,505 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஒன்றியத்தில் 224 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன.

 


 

 நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் 38,692 பேரும், பெண் வாக்காளர்கள் 38,219 பேரும், மற்றவர்கள் 2 பேரும் என மொத்தம் 76,913 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஒன்றியத்தில் 141 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் ஒன்றியத்தில் ஆண் வாக்காளர்கள் 57,065 பேரும் பெண் வாக்காளர்கள் 56,837 பேரும் மற்றவர்கள் ஒரு நபர் என மொத்தம் 1,13,903 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஒன்றியத்தில் 197 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 



 

 

 

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கு.செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.