குடியாத்தம் அருகே இரு சிறுவர்களுக்கு அவர்களது  தந்தையின் கள்ளக்காதலி மர்ம உறுப்பு உள்ளிட்ட அணைத்து பகுதிகளிலும் சூடுவைத்து கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரப்பை   ஏற்படுத்தியுள்ளது .
 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜீவா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்  சேட்டு (35) . கூலி வேலை செய்து அவருக்கு ஈஸ்வரி என்பவருடன் திருமணமாகி சித்தார்த் (10) நித்திஷ் (8) ஆகிய இரண்டு மகன்கள்  உள்ளனர். இந்த  நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் தாயை இழந்த குழந்தைகள் தந்தை சேட்டுவிடமே வளர்ந்து வந்தனர். 
 
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த வேணி (30) என்ற பெண்ணுடன் சேட்டுக்குக் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இன்னொருவருடன் திருமணம் செய்து கொண்ட வேணி அவரது கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாகச் சேட்டு மற்றும் அவரது இரு மகன்களுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இதனிடையே முதல் மனைவியின் குழந்தைகளான சித்தார்த் மற்றும் நித்திஷ் ஆகியோரை வேணி சித்ரவதை செய்துவந்துள்ளார். குறிப்பாக சேட்டுவின் 8 வயது மகன் நித்திஷின் முதுகு, கை, கால்கள், பாதம்,  பிறப்பு உறுப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்  சூடு வைத்து சித்தராவதை செய்து வந்துள்ளார். அவரது சித்ரவதை தாங்க முடியாமல்  செவ்வாய்க் கிழமை  காலை நித்திஷ் அவருடைய வீட்டிலிருந்து தப்பித்து அதே பகுதியிலுள்ள அவரது பெரியம்மாவான நிஷாந்தினி வீட்டிற்கு ஓடி சென்ற  நித்திஷ்  நடந்ததை கூறியுள்ளார் .
 
 
மேலும் அந்த சிறுவனின் ஆடைகளை கழற்றிப் பார்த்த போது , உடலின் ஒரு பகுதியை கூட  விட்டுவைக்காமல் சூடு வைத்து சித்ரவதை செய்தது அம்பலம் ஆனது . இதனைக் கண்டு ஆத்திரமும் , அதிர்ச்சியும்  அடைந்த நிஷாந்தினி மற்றும் அவர்களது உறவினர்கள் நித்தீஷை குடியாத்தம் நகரக்  காவல் நிலையம் அழைத்துச் சென்று  புகார் கொடுத்தனர். சிறுவனின் பெரியம்மா நிஷாந்தினி  கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீசார்  சேட்டின்  கள்ளக்காதலி வேணியைக் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர் .
 
அப்போது வேணி தன்னுடைய வாக்குமூலத்தில், அவரும் அவரது கள்ளக் காதலனுமான சேட்டும் தனிமையில் இருப்பதற்கு அவரது முதல் மனைவியின் குழந்தைகள் இடையூறாக இருந்ததால் , சேட்டு வேளைக்குச் சென்ற பின் குழந்தைகள் இருவருக்கும் சூடு வைத்து சித்ரவதை செய்துவந்துள்ளார் . மேலும் சேட்டு பெரும்பாலான நேரங்களை வேணியுடனே செலவு செய்து வந்ததால் குழந்தைகளுக்கு வேணியை பற்றிய  புகாரைத் தெரிவிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்த வழக்கு தொடர்பாக ABP நாடு செய்து குழுமம் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி , ஆய்வாளர் லட்சுமியை தொடர்பு கொண்டு பேசிய போது "வேணி அளித்த  வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது   இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 294 (b) (அசிங்கமாகப் பேசுவது ) ,  324 (நெருப்பில் காய்ச்சப்பட்ட பொருளைக் கொண்டு காயம் ஏற்படுத்துதல்), 326 (நெருப்பில் காய்ச்சப்பட்ட பொருளைக் கொண்டு உள்ளுறுப்புகளில் காயம் ஏற்படுத்துதல்) , 355 (ஒருவரை அவமதிக்கும் நோக்கத்துடன் தாக்குதலில் ஈடுபடுவது) ,  506 (ii)  (உயிரைப் பறிக்கவோ அல்லது  கொடுங்காயாம் ஏற்படுத்தியதற்கான தண்டனை)  மற்றும் பிரிவு 75  சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம் உள்ளிட்ட ஆறு  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குடியாத்தம் நீதி மன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு வேலூர் பெண்கள் தனிச் சிறையில் தற்பொழுது அடைக்கப்பட்டுள்ளார் . என்று தெரிவித்தார்.
 
மேலும் காயமடைந்த நித்திஷை அவரது உறவினர்கள் மருத்துவச் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் .  8 வயதுக் குழந்தை  என்றும் பாராமல் சிறுவனின் உடல் முழுவதும் அவரது தந்தையின் கள்ளக்காதலி சூடு வைத்த கொடுமைப் படுத்தி வந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குடியாத்தம் போலீசார் தொடர்ந்து சிறுவர்களின் தந்தை சேட்டுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
அண்மையில் விழுப்புரத்தில் பெற்ற தாயே தனது குழந்தையை அடித்து சித்ரவதை செய்யும் காணொளி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், தற்பொழுது இந்த குடியாத்தம் சம்பவமும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது .