வேலூர் தொரப்பாடியில் இயங்கி வரும்  அரசு மேல்நிலைப்பள்ளியில்  800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொரப்பாடி பள்ளியில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வழக்கமான நேரத்தை விட ஒருமணி நேரம் முன்பாக அவர்களுக்கு பள்ளிவிடப்பட்டது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் பள்ளியை விட்டு செல்லாமல் வகுப்பறையில் அமர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை வீட்டுக்கு செல்லும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தினர். அதனை ஏற்று சில மாணவர்கள் அங்கிருந்து சென்றனர். ஆனால் சில மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.




மாணவர்கள் உச்சகட்டமாக வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜைகளை தரையில் போட்டு அடித்தும், அவற்றின் மீது ஏறி நின்று குதித்தும், கால்களால் எட்டி உதைத்தும் உடைத்துள்ளனர். இதை கண்ட ஆசிரியர்கள் இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் விரைந்து தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் வந்தனர். காவல்துறையினர் வருவதை கண்ட மாணவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். மாணவர்கள் இரும்பு மேஜையை உடைக்கும் காட்சிகள் முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது




vellore/ அதிகரிக்கும் அட்டூழியம்..... மேசைகளை அடித்து உடைத்த பள்ளி மாணவர்கள்/school student fight video


இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமியிடம் கேட்டதற்கு, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். வீடியோவில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்பேரில் இரும்பு மேஜைகளை உடைத்த மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலங்களில் மாணவர்கள் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.




இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மேஜை நாற்காலிகளை உடைத்த 12 மாணவர்களையும் பெற்றோர்களையும் அழைத்து நேரில் விசாரணை செய்ய செய்தார். பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஃபேர்வெல் பார்ட்டி வைக்கவேண்டும் என்று கேட்டதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் மேஜை நாற்காலிகளை உடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மேசையை உடைத்த 12 மாணவர்களை மே 5 ஆம் தேதி வரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்கள் ஒழுங்கற்ற முறையில் நடத்து கொள்ளும் வீடியோ வலைதளங்களில் பரவி வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.