திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா சரவணன் விஜயன், கிருபாகரன் ஆகியோர் இணைந்து தெள்ளாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது பென்னாட்டகரம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலின் அருகே சாலையோரம் இருந்த இரண்டு சிலைகள் ஆய்வு நடத்தியது தொடர்பாக ராஜ் பன்னீர்செல்வம் கூறுகையில், நான் மற்றும் என்னுடைய நண்பர்கள் உடன் தெள்ளாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது  பென்னாட்டகரம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலின் அருகே சாலையோரம் இரு சிலைகள் இருப்பதை கண்டோம். 



விஷ்ணு சிலை:


விஷ்ணு சிலை அழகான வேலைப்பாடுகளுடன் அமைந்த இச்சிற்பம் மண்ணுக்குள் கால்வாசி புதைந்த உள்ள நிலையில் இருகாதுகளிலும் அழகான மகர குண்டலங்கள் அணிந்தும். நிமிர்ந்த நேர் கொண்ட பார்வையுடன் பெரிய கண்களும், தடித்த உதடுகளும் கொண்டு காட்சி தருகிறார். மேல் வலக்கையில் பிரயோக சக்கரத்தையும் மேல் இடக்கையில் சங்கையும் கீழ் வலக்கை அபய முத்திரையிலும் கீழ் இடக்கை கடிமுத்திரையில் இடையின் மீது வைத்துள்ளவாறு வடிக்கப்பட்டு உள்ளது. கழுத்தில் பட்டையான சரப்பளி அலங்கரிக்க இடது தோளில் இருந்து சரிந்து மார்பின் மீது பரவி பின் வலது கைக்கு மேல் ஏறும் நிலித முப்புரி நூலுடன் நான்கு கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளைகளுடன் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்ப அமைதியை வைத்து இது எட்டாம் நூற்றாண்டின் கடைபகுதியை சேர்ந்த சிற்பம் என்று கருதப்படுகிறது.



 


விநாயகர் சிலை:  மேலும் விஷ்ணு சிற்பத்திற்க்கு அருகே பலகை கல்லில் புடைப்பாகப் பிள்ளையார் சிற்பம் காணப்படுகிறது. பிள்ளையார் நான்கு கரங்களுடன் பதமாசன கோலத்தில் பெரிய வயிற்றுடன் பீடத்தின் மீது அமர்ந்தவாரு வடிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சிலை மிகவும் தேய்ந்து காணப்படுகிறது. இதனால் மேல் இரு கரங்களில் உள்ள ஆயுதங்களை அடையாளம் காண இயலவில்லை. கீழ் வலது மற்றும் இடது கரங்கள் முறையே அபய முத்திரையிலும் இடையில் கடி முத்திரையிலும் காட்டப்பட்டு உள்ளது. யானையின் காது மடல்கள் போன்ற பெரிய காதுகளுடன் துதிக்கையை வலப்பக்கமாகச் சுருட்டி வலம்புர் பிள்ளையாராக காட்சி தருவது சிறப்பாகும். இப்பகுதியில் மேலும் கண்டறியப்பட்டுள்ள சில பல்லவர் காலத்துப் பிள்ளையார்களுடன் இச்சிற்பமும் ஒத்துப் போவதால் இதன் காலம் 7 ஆம் நூற்றாண்டின் கடைபகுதி அல்லது எட்டாம் நூற்றாண்டின் தொடக்கமாக கருதப்படுகிறது.



 


கொற்றவை சிற்பம்:  மேலும் இவ்வூரின் ஏரிக்கரையின் வயல்வெளியில் இன்னொரு சிற்பம் சாய்ந்த நிலையில் இருப்பதை கண்டு சுத்தம் செய்து ஆய்வு மேற்கொண்டதில் அச்சிற்பம் கொற்றவை என்று கண்டறியப்பட்டது. கொற்றவை அழகாள ஜடா மகுடம் தலையை அலங்கரிக்க, கழுத்தில் கண்டிகை மற்றும் சவடி அணிந்து, தனது அனைத்து சுரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் காட்சியளிக்கிறார். எட்டு கரங்களில் தனது மேல் வலது கரம் பிரயோக சக்கரம் ஏந்தியும் ஏனைய வலது கரங்கள் முறையே போர் வாள், சூலம் ஏந்திய நிலையின் நான்காவது வலக்கரம் அபயமுத்திரையிலும் மேல் இடது கரத்தில் சங்கும். ஏனைய கைகள் முறையே குறுவாள் மான் கொம்பு ஏத்திய நிலையில் கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. வழக்கமாகக் கொற்றவையின், இடைய அருகே இருபுறமும் காட்டப்படும் வீரர்களும் இடதுபுறம் கலைமான் காட்டப்பட்டுள்ளது. எருமை தலையின் மீது திரிபங்க நிலையில் காட்சி தருகிறது மேலும் கொற்றவையின் தலையருகே பெரிய குலம் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது.



இக்கொற்றவை சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள் ஆடை மற்றும் அணிகலன்களை வைத்தும் இதன் காலம் கி.பி 8 ஆம் நூற்றாண்டாக கருதப்படுகிறது. மேலும் இவ்வூரில் தவ்வை சிற்பம் ஒன்று இருப்பதாக பழனிசாமி அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. பலகை கல்லில் மாந்தன் மாந்தியுடன் அவரின் ஆயுதமான துடைப்பம் மற்றும் காக்கை கொடியுடன் தவ்வை அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கலைப்பாணியில் வடிக்கப்பட்டு இருந்தாலும் இச்சிற்பமும் அதே காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம்.


இச்சிற்பங்களை வைத்து இவ்வூரில் பல்லவர் கால கோவில் ஒன்று கால ஓட்டத்தால் அழிந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது, சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இச் சிற்பங்களும் அதன் சிறப்பும் மகத்துவமும் அறியாமல் ஊர் மக்கள் அதனைச் சாலையோரமும், குப்பை மேட்டிலும் கிடத்தி வைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயம் ஊரின் தொன்மைக்குச் சான்றாக உள்ள இது போன்ற சிற்பங்களை ஊர் மக்கள் முறையாக பராமறித்து பாதுகாத்திட வேண்டும் என கூறினார்.