திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடு மங்கலத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் நிழல் குடை கட்டும் பணிக்காக அகற்றப்பட்ட வன்னியர்களின் சின்னமான அக்னி கலசம் அப்பணிகள்  முடிவடைந்த நிலையில்  நிழற்குடை பக்கத்தில் அதிகாரிகள் ஒதுக்கித் தந்த இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது.


இந்நிலையில்  விடுதலை சிறுத்தைகளின் புகாரையடுத்து இரவோடு இரவாக அந்த அக்னி கலசம் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதனால் பாட்டாளி மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அக்னி கலசம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.  பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் அகற்றப்பட்ட இடத்தில் அக்னி கலசத்தை மீண்டும் வைக்காவிட்டால் போராட்டம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றார். 


இந்நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதியான இன்று தமிழ் பேரரசு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் இயக்குனர் வ. கௌதமன் நாயுடு மங்கலத்திற்கு சென்று அக்னி கலசம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அக்னி கலசம் அகற்றப்பட்டது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்தார். 



 




 


இயக்குனர் கௌதமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது,


“தமிழர்களுக்கு எந்த இடத்தில் அநீதி நடந்தாலும் அங்கு அமைதியை ஏற்படுத்துவதும், தமிழ் குடிகளுக்கும் ஒற்றுமையை உருவாக்குவதும்தான் எங்களுடைய வேலை.  அந்த அடிப்படையில் இங்கு வந்திருக்கிறேன். 32 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட வன்னியர்களின் பெரிய குறியீடான அவர்கள் மதிக்கக்கூடிய அக்னி கலசம் இரவோடு இரவாக திருட்டுத்தனமாக தமிழ்நாடு அரசாங்கத்தை சார்ந்த அரசு அதிகாரிகளால் பெயர்த்து எடுக்கப்பட்டு அக்னி கலசத்தை மறைத்து வைக்கப்பட்டுள்ளது கடும் கணடத்துகுறியது.  ஜாதி கலவரத்தை ஜாதிக்காரர்கள் நடத்துவதும், ஜாதி தலைவர்கள் நடத்துவதும் நடந்திருக்கிறது. ஆனால் ஜாதி கலவரத்தை அரசே நடத்த நினைப்பது  நேர்மையற்றது, அறமற்றது. உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிடவேண்டும்.


 




 


இதற்கு பின்னணியில் மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு , மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், மற்றும் அவரது நேர்முக உதவியாளர் கணேஷ் கோட்டாட்சியர் வெற்றிவேல் ஆகியோர் உள்ளனர்.  அதுமட்டுமின்றி இங்கு ஜாதி கலவரம் நடந்தால் அதற்கு காரணம் அமைச்சர், ஆட்சியர் மற்றும் நேர்முக உதவியாளர், கோட்டாட்ச்சியர் தான் காரணம் ஆவர்கள். அக்னி கலசம் நெடுஞ்சாலையில் இருக்கின்றது என்று சொன்னால் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகளை ஏன் அகற்றவில்லை?  அந்த விஷயத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும்.  தமிழ் குடிகள் ஓட்டுப்போட்டு தான் கோட்டைக்கு போய் உள்ளோம் என அவர் நினைத்திட வேண்டும்.


 




 


வடமாவட்டங்களில் பட்டியல் இன மக்களையும் வன்னியர்களையும் தென் மாவட்டங்களில் தேவர்களையும் தேவேந்திர குல வேளாளர்களும் அடித்துக்கொள்ள வைப்பது சரியானதல்ல. நாங்கள் அடித்துக் கொள்வோம், நீங்கள் வாழ்வீர்களா? இந்த அக்னி கலசத்தை மீண்டும் நிறுவா விட்டால் வட மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் அக்னி கலசங்களை நெடுஞ்சாலைகளில் வைத்தால் என்ன செய்வீர்கள்? எனவே அரசு வன்மத்தை உருவாக்காமல் அமைதியை ஏற்படுத்திட வேண்டும் எங்கள் தமிழ் குடிகளிடையே மகிழ்ச்சியை உருவாக்கிட வேண்டும். மற்றவர்களைப் போல் நான் பேசிவிட்டு செல்பவன் அல்ல,  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்னைப் பார்த்து இருப்பீர்கள். கத்திப்பாரா பாலத்தில் என்னை பார்த்திருப்பீர்கள். ஐநா சபைக்குள் நெருப்பாக நின்றதையும் பார்த்திருப்பீர்கள். எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு அக்னி கலசத்தை நிறுவாவிட்டால் இங்கேயே வந்து உட்கார்ந்து விடுவேன் பிறகு எவனாலும், எமனாலும் கூட என்னை எழுப்பிட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார். 


 





அவரது வருகையை ஒட்டி துணை காவல்கண்காணிப்பாளர்கள்  அண்ணாதுரை, குணசேகரன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இதை அடுத்து திருவண்ணாமலைக்கு வந்த கௌதமன் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேசை அவரது வீட்டில் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் அக்னி கலசத்தை மீண்டும் வைப்பது குறித்து அமைச்சருடன் பேசி முடிவு எடுப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியிருப்பதாகவும், இப்பிரச்சனை குறித்து முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரின் கவனத்திற்கு எங்கள் தரப்பிலும்  கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறேன் என்றார்