தேன்கனிக்கோட்டையில் மழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சாமி கும்பிட வந்த சிறுமி உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில் உரூஸ் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை அடுத்த தர்கா சுவற்றின் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பேன்சி மற்றும் பொம்மை விற்பனை செய்யும் கடைகள் அமைத்திருந்தனர். இந்த விழா முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை அவர்கள் கடையை காலி செய்து, பொருட்களை மூட்டையாக கட்டி கொண்டிருந்தனர். அப்போது திடீரென கனமழை காரணமாக அங்கு தனியார் நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த 8 அடி உயர சுற்றுச்சுவர் மழையினால் நனைந்து திடீரென இடிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் இந்த சுற்றுச்சுவரின் இடிபாடுகள் பேன்சி மற்றும் பொம்மை கடைகள் மீது விழுந்தது. இதில் கடையில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்கிடையே சிக்கிகொண்டனர்.


 




இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு இருந்தவர்கள் தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்திள் தகவல் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய அசாம் மாநிலத்தை சேர்ந்த பேன்சி கடைக்காரர்கள் ஹாமியன் பேகம் வயது (35), ரபிக்வுல் இஸ்லாம் வயது (22), இசாத் அலி வயது (35) மற்றும் தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவரது மகள் சகானா வயது (11), வெங்கடேஷ் மகள் ஹேமாவதி வயது (12) ஆகியோரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அசாம் மாநில பெண் ஹாமியன் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார்.


 




 


இதேபோல் கிருஷ்ணகிரி அரசு மருத்துமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பாலாஜி மகள் சகானாவும் செல்லும் வழியில் பலியானார். படுகாயம் அடைந்த மற்ற 3 நபய்களும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் உதவி மாவட்ட ஆட்சியர் தேன்மொழி, தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவண மூர்த்தி, துணை காவல் கண்காணிப்பாளர் முரளி மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த விசாரணையில் பலியான சிறுமி சகானா, தேன்கனிக்கோட்டை அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்ததும், விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது தோழியான 7-ம் வகுப்பு மாணவி ஹேமாவதியுடன் சாமி கும்பிட வந்தபோது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலியானதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சாமி கும்பிட சென்ற சிறுமி உள்பட 2 நபர்கள் பலியான சம்பவம் தேன்கனிக்கோட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.