திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த வேடந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் வயது (56). இவரது உறவினர் விழுப்புரம் மாவட்டம்  மலையனூர் அருகில் உள்ள கொடுக்கன் குப்பன் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி லட்சுமி வயது (45). இவரும் அவரது உறவினர் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மனைவி அமிர்தம் வயது (61) ஆகியோர் கடந்த 2013 ஆண்டு ரங்கநாதனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் 25 லட்சம் தேவைப்படுகிறது. நீங்கள் கடனாக எப்படியாவது ஏற்பாடு செய்து கொடுத்தால் அந்த பணத்தை திருப்பி கொடுக்கும் போது 2 மடங்காக கொடுத்து விடுகிறோம் என்று ஆசைவார்த்தையை கூறியுள்ளனர். இதை நம்பி ரங்கநாதன் தான் வைத்திருந்த 15 லட்சம் மற்றும் அவருடைய மனைவி புஷ்பாவின் 21 பவுன் நகையையும் கொடுத்து உள்ளார். அதனைத் தொடர்ந்து 2 வருடங்களுக்கு மேலாகியும் பணத்தை திருப்பி கொடுக்காததால் லட்சுமியை ரங்கநாதன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.


 


 




பின்னர் கடந்த 2015 ஆண்டு மார்ச் மாதத்தில் லட்சுமியும், அமிர்தமும், அவர்களது உறவினர்கள் மங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி லதா வயது (49), சக்திவேல் மனைவி சசிகலா வயது (40) ஆகியோரை ரங்கநாதனின் வீட்டிற்கு வரவழைத்து  அவரிடம் லதா மற்றும் சசிகலாவை அறிமுகம் செய்து வைத்தனர். இவர்களுக்கும் 10 லட்சம் தருமாறும் அந்த பணத்துடன் ஏற்கனவே வாங்கிய பணத்துடன் சேர்த்து 2 மடங்காக கொடுத்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர். அதையும் நம்பி அவர் 70 ஆயிரத்தை அமிர்தத்திடமும், 1 லட்சத்து 40 ஆயிரம் சசிகலாவிடமும், 6 பவுன் நகையை லதாவிடம் கொடுத்து உள்ளார். பின்னர் 6 மாதமாகியும் பணத்தை தராததால் ரங்கநாதன் லட்சுமிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அப்போது லதாவிற்கு ஆரணியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 3 கோடியே 57 லட்சம் வரவுள்ளது. இந்தபணம் வந்தவுடன் உங்களுடைய பணத்தை நாங்கள் 2 மடங்காக கொடுத்து விடுவதாக 4 பெண்களும்  கூறியுள்ளனர். மேலும் பல மாதங்களாக 4 பெண்களும் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் ரங்கநாதன் அவர்களை நேரில் சந்தித்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டு உள்ளார்.


 




அதற்கு அவர்கள் ரங்கநாதனை நீ பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை போல் 20க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் அவர்களிடம் கொடுத்து ஏமாந்து உள்ளதும் அவருக்கு தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ரங்கநாதன் மோசடி சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் லட்சுமி, அமிர்தம், லதா, சசிகலா ஆகிய 4 பெண்களும் ரங்கநாதனிடம் ஆசைவார்த்தை கூறி 17 லட்சத்து 55 ஆயிரம் மற்றும் 27 பவுன் நகைகள் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பெண்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக  காவல்துறையினர் கூறுகையில், அவர்கள் இதேபோல் 20க்கும் மேற்பட்டவர்களிடம் ஆசைவார்த்தை கூறி சுமார் 3 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் சதுரங்க வேட்டை படத்தில் கதாநாயகன் பொதுமக்களிடம் தங்களுடைய பணத்தை கொடுத்தால் அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றி செல்வது போன்று திருவண்ணாமலையில் 4 பெண்கள் பணத்தை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.