தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதி வளைவில் இன்று காலை சங்கிலித் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்தை நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியானது தொப்பூர் கட்டமேடு அடுத்த வளைவை கடக்கும் பொழுது முன்னாள் சென்ற இரண்டு கார்கள் மற்றும் விறகு பாரம் ஏற்றிச் சென்ற ஒரு லாரி உள்ளிட்டவற்றின் மீது மோதியுள்ளது. லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியதில், விறகு ஏற்றிய லாரி அப்பகுதியிலேயே கவிழ்ந்துள்ளது. ஆனால் விபத்து ஏற்படுத்திய நெல் பாரம் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுனர் லாரியை நிறுத்தாமல் அதி வேகத்தில் இயக்கியுள்ளார். இதனால் ஆஞ்சநேயர் கோவில் வளைவு வரை சென்று சாலையின் சென்டர் மீடினில் மோதி நெல் மூட்டைகள் அனைத்தும் சாலையின் மறு மார்கமான சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரிந்தது.



 

இதனால் ஒருபுறம் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விறகு லாரிகள், கார்களும்,  மறுபுறம் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி சாலையிலேயே கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் உடனடியாக  விபத்துக்குள்ளான வாகனங்களை  அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். ஆனாலும் சாலையில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. ஆனால் முழு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் சீரமைப்பு பணிகளை துரிதமாக செய்தனர்.



 

மேலும் காலை நேரத்திலேயே நடைபெற்ற இந்த சங்கிலித் தொடர் விபத்தில் ஓட்டுநர்கள் மற்றும் கார்களில் பயணித்தவர்களுக்கு உயிர்சேதம் மற்றும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்த் தப்பினர். தொப்பூர் கணவாய் பகுதியில் காவல் துறை மற்றும் போக்குவரத்து துறையினர் விபத்துகளை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், அதிகாலைகளில் நடைபெறும் விபத்துகளால் இதுபோன்று வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருவது தொடர்ந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் 12 வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனை தடுப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எடுத்துள்ளனர்.